பிரபல தமிழ் நடிகையும், சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து சர்ச்சைகளில் சிக்குபவருமான கஸ்தூரி, அடுத்த சட்டசபை தேர்தலில் தாம் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.
நடிகை கஸ்தூரி, சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இயங்கக்கூடியவர். அவ்வப்போது அரசியல் விமர்சனம், சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்டு, நெட்டிசன்களின் விமர்சனத்திற்கும் இலக்காகி வருபவர்.
அண்மையில், ஐ.பி.எல். போட்டியில் சென்னை அணியின் மந்தமான ஆட்டத்தை பார்த்துவிட்டு, எம்ஜிஆர்- லதா பாடல் காட்சியுடன் ஒப்பிட்டு, சென்னை அணி இப்படி தடவுகிறார்களே என்று பேசி எம்.ஜி.ஆர். ரசிகர்களிடம் நன்கு வாங்கி கட்டிக் கொண்டார்.
இந்த சூழ்நிலையில் தான் தனது அரசியல் ஆர்வத்தை நடிகை கஸ்தூரி வெளிப்படுத்தி இருக்கிறார். இதுபற்றி அவர் கூறுகையில், இந்த மக்களவை தேர்தலில் கூட எனக்கு சிலரிடம் இருந்து வாய்ப்பு வந்தது. நான்தான் வேண்டாமென்று கூறிவிட்டேன்.
நல்லவர்கள் பலர் தமிழகத்தில் இருந்தாலும், அவர்கள் அரசியலில் இல்லை. மக்களவை தேர்தலில் கூட எனக்கு ஏமாற்றமாகவே இருந்தது. திருடனில் நல்ல திருடனை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற வாய்ப்பு தான் நம் முன்பு இருந்தது.
அரசியலுக்கு வருவதற்கு பணம் இருக்க வேண்டும். வெட்கம், மானம், சூடு, சொரணை எதுவும் இருக்கக் கூடாது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் நான் போட்டியிட வாய்ப்பு உள்ளது. அதற்குள் எனக்கான தகுதியை வளர்த்துக் கொள்வேன். தமிழகத்தில் சுயேச்சையை ஊக்கப்படுத்த மக்கள் தயாராக இல்லை. எனவே, களப்பணி மேற்கொள்ள ஒரு கட்சி தேவை என்று கூறியுள்ளார்.