மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்டவனப்பகுதியில், மின்சாரம் தாக்கி காட்டு யானை உயிரிழந்தது. இது குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
கோவை வனக்கோட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதிகளில் காட்டு யானைகள் நடமாடுகின்றன. வனப்பகுதியில் நிலவி வரும் கடும் வறட்சியால், உணவு மற்றும் தண்ணீரைத் தேடி இடம் பெயருகின்றன். அந்திசாயும் மாலைப்பொழுதில் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் இருக்கும் தோட்டங்களில் புகுந்து விவசாய விளை பொருள்களை உட்கொள்கின்றன.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட சுண்டப்பட்டி பிரிவு நெல்லித்துறை காப்புக்காடு அருகே தனியார் பாக்குத்தோப்பு உள்ளது. நேற்றிரவு பாக்குத்தோப்பினுள் புகுந்த, 40 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை பாக்குமரத்தை முட்டி உடைத்து தள்ளியுள்ளது.
அப்போது,உடைந்த பாக்குமரம் தோட்டத்தையொட்டி செல்லும் மின்கம்பி மேல் விழுந்தது. கீழே விழுந்த பாக்கு மரத்தை யானை கால்களால் மிதித்த போது மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்நது.
தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் வனத்துறையினர் அங்கு விரைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்சாரம் தாக்கி காட்டு யானை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் காட்டு யானை ஒன்று இதே போல் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.