அ.ம.மு.க. பொதுச்செயலாளர் ஆனார் தினகரன்! சசிகலாவை நீக்கவும் அதிரடி முடிவு

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளராக, டி.டி.வி. தினகரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

மக்களவை தேர்தல் முடிந்த சூட்டோடு, அம்மா மக்கள் முன்னேற்ற கழக (அ.ம.மு.க.) நிர்வாகிகளின் கூட்டம், சென்னை அசோக் நகரில் இன்று நடந்தது. இதில், மக்களவை தேர்தல் குறித்தும், அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இல்லாததால் ஒரே சின்னம் பெற முடியாதது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

 

அடுத்த மாதம் நான்கு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடப்பதால், அதற்கு முன்பாக அங்கீகாரம் பெற்றாக வேண்டும் என்று தினகரன் கருதுகிறார். எனவே, கட்சியை உடனடியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய நடவடிக்கை துவங்குவது; அதற்கு வசதியாக டி.டி.வி. தினகரனை அ.ம.மு.க. பொதுச்செயலாளராக தேர்வு செய்வது என்று இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் அ.ம.மு.க.வின் புகழேந்தி பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், கட்சி பொதுச்செயலாளராக இருந்த சசிகலாவை, அப்பொறுப்பில் இருந்து விலக்கி வைப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிமுகவிற்கு உரிமை கோரும் வழக்கை அவர் நடத்தும் பொருட்டு, இவ்வாறு முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Leave a Reply