அச்சுறுத்துவதற்காக திட்டமிட்டே சோதனை நடந்தது! தூத்துக்குடி ரெய்டு பற்றி கனிமொழி குற்றச்சாட்டு

திட்டமிட்டு அச்சுறுத்தும் நோக்கில் தமது வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடத்தியதாக, கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.

 

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில், தி.மு.க. வேட்பாளராக கனிமொழி போட்டியிடுகிறார். அவர் தூத்துக்குடி குறிஞ்சிநகர் 2ஆவது தெருவில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கி இருந்து பிரசாரம் செய்து வந்தார்.

 

நேற்றிரவு 8 மணியளவில் 10 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள், கனிமொழியின் இந்த வீட்டில் சோதனையிட்டனர். கதவுகள் மூடப்பட்டு, நடந்த இந்த சோதனையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கட்சியினர், அந்த வீட்டின் முன் கூடினர். இரண்டு மணி நேரத்திற்கு பிறகு சோதனை முடித்து, அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர்.

 

இந்த சோதனை குறித்து கருத்து தெரிவித்த கனிமொழி, திட்டமிட்டு அச்சுறுத்தும் நோக்கில் தமது வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடத்தியதாகவும், இது ஜனநாயக விரோதமானது என்றும் குற்றம்சாட்டினார்.

 

நாங்கள் வருமான வரி சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தோம். ஒரு மணி நேரமாக வீடு முழுவதும் சோதனை நடத்தினர். ஆனால் இந்த சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை. பின்னர் தவறான தகவலால் சோதனை நடத்தியதாக அவர்களே ஒப்புக்கொண்டதாக தெரிவித்தார்.


Leave a Reply