திமுகவினரால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக, கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி, கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி சார்பில் வழக்கறிஞர் செந்தில்நாதன் தலைமையில், ஏராளமானோர் நேற்றிரவு எனது வீட்டை முற்றுகையிட்டனர். அப்போது என்னை மிரட்டினர்.
இதுபற்றி போலீஸ் எஸ்.பி.க்கு தகவல் தெரிவித்தேன். அவர் வந்து என்னை பத்திரமாக மீட்டார். எனது உயிருக்கும், குடும்பத்தினருக்கும் ஆபத்து உள்ளது. அதேபோல், கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே பிரசாரம் செய்ய, செந்தில் பாலாஜியும், ஜோதிமணியும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி, மிரட்டல் விடுத்து அனுமதி பெற்றுள்ளதாக, அவர் குறிப்பிட்டார்.
கொலை மிரட்டல் குறித்து தேர்தல் ஆணையம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், கரூர் மாவட்ட ஆட்சியர் புகார் அளித்துள்ளார்.
மாவட்டத்தின் சட்ட ஒழுங்குகை பாதுகாத்து மக்களுக்கு பாதுகாவலனாக இருக்கும் மாவட்ட ஆட்சியரே தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று புகார் அளித்திருப்பது, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.