தேர்தல் ஆணையத்தின் கெடுபிடி வேகம்! அரசியல் கட்சியினர், மதுப்பிரியர்கள் சோகம்!!

தமிழகம், புதுவையில் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும், தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்றத்தொகுதிகளுக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

 

மக்களவை தொகுதி வேட்பாளருக்கு தேர்தல் செலவு வரம்பு ரூ. 70 லட்சம் , சட்டமன்ற தொகுதி வேட்பாளருக்கு ரூ. 28 லட்சம் என்று தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளது.

 

தேர்தல் திருவிழா தொடங்கி விட்டாலே அரசியல் கட்சி தொண்டர்கள் முதல் நோட்டீஸ் அடிப்பவர்கள், மேளதாளம் முழங்குபவர்கள், நடன,நாட்டிய கலைஞர்கள் உட்பட பலர் உற்சாகம் அடைந்து விடுவர். ஏனென்றால் அவர்களுக்கு இதன் மூலம் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

 

 

அதேபோல் தேர்தல் திருவிழா என்றாலே மதுபானம், கோழி பிரியாணியும் தவிர்க்க முடியாததாகிவிட்டது. ஆனால்,தேர்தல் ஆணையம் வேட்பாளர் செலவு வரம்பில் சிக்கன் பிரியாணி செலவு 200 ரூபாய் என நிர்ணயித்துள்ளது.

 

இதனால், வேட்பாளர்களுடன் செல்லும் அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் உணவிற்காக பிரியாணி கொடுக்க முடியாதபடி, தேர்தல் ஆணையம் செக் வைத்துள்ளது. நம்மவர்கள் அதையும் மீறி கொடுத்தால்,  தேர்தல் பறக்கும் படையினர் வீடியோவுடன் ஆதாரம் சமர்பித்து வேட்பாளர் செலவு வரம்பில் சேர்த்து விடுகின்றனர்.

 

மேலும், தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 18 ஆம் தேதிக்கு முன்பாக 16 ஆம் தேதி காலை 10 மணி முதல் 18 ஆம் தேதி இரவு 12 மணி வரை மதுபான கடைகள், பார்கள், கிளப்புகள், போலீஸ் மற்றும் ராணுவ கேண்டீன்கள் முதற்கொண்டு அனைத்து மதுபான விற்பனை கூடங்களை மூட தேர்தல் ஆணையத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் மதுப்பிரியர்கள் ஏமாற்றமும் சோகமும் அடைந்துள்ளனர்.

 

கோவை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ராசாமணி உத்தரவினை மீறி மது விற்போர்,பதுக்கி வைத்திருப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

 

தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையால் பிரச்சாரத்தின் போது பிரியாணியும், குவாட்டரும் கிடைக்காமல் போய்விட்டதே என்று கட்சி தொண்டர்கள் சிலர் முணுமுணுப்பதை கேட்க முடிகிறது.

– விஜயகுமார், கோவை.


Leave a Reply