புதுடெல்லி: இந்தியாவில் ஏழு கட்டங்களாக நடைபெறும் மக்களவை தேர்தலில் முதல் கட்டமாக இன்று 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மக்களவைக்கு மொத்தம் உள்ள 543 தொகுதிகளுக்கு இன்று (ஏப்ரல் 11 ) தொடங்கி அடுத்த மாதம் 19 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. அத்துடன் ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிசா மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடக்கிறது.
முதல் கட்டமாக 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி ஆந்திராவில் 25, அருணாசலபிரதேசத்தில் 2, அசாமில் 5, பீகாரில் 4, சத்தீஸ்கரில் 1, காஷ்மீரில் 2, மகாராஷ்டிராவில் 7, மணிப்பூரில் 1, மேகாலயாவில் 2, மிசோரமில் 1, நாகலாந்தில் 1, ஒடிசாவில் 4, சிக்கிமில் 1, தெலுங்கானாவில் 17, திரிபுராவில் 1, உத்தரபிரதேசத்தில் 8, உத்தரகாண்டில் 5, மேற்கு வங்காளத்தில் 2, லட்சத்தீவுகளில் 1, அந்தமான் நிகோபார் தீவுகளில் 1 மக்களவை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
காலை 7 மணிக்கு தொடங்கியுள்ள ஓட்டுப்பதிவு மாலை 6 மணிக்கு முடிகிறது. ஒரு சில இடங்களில் மாலை 4 மணி அல்லது 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெறுகிறது. நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகம் உள்ள மாநிலங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஜனநாயகத் திருவிழாவான தேர்தல் தொடங்கியிருப்பதை உலகமே ஆர்வமுடனும் ஆச்சரியத்துடன் பார்க்கிறது. தேர்தலை நேரில் காண வெளி நாட்டு பிரதிநிதிகளும், தேர்தல் சுற்றுலா என்ற பெயரில் வெளிநாட்டினரும் ஆர்வமாக இந்தியாவுக்கு வந்துள்ளனர்.