சென்னை: தேர்தல் நேரத்தில் அரசியல் பேசவேண்டாம் என்று கூறிய ரஜினி, நதிநீர் இணைப்பு பற்றிய பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை மட்டும் பாராட்டி பேசியதன் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். இருப்பதாக பேச்சு நிலவுகிறது.
நடிகர் ரஜினியின் தர்பார் படம் குறித்த அறிவிப்பும், போஸ்டரும் நேற்று வெளியாகி, சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆனது. அதன் படப்பிடிப்பு மும்பையில் இன்று தொடங்குகிறது. இதற்காக சென்னையில் இருந்து மும்பைக்கு ரஜினி புறப்பட்டு சென்றார்.
அதற்கு முன்பாக செய்தியாளர்களை நேற்று சந்தித்த அவர், பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் நதிநீர் இணைப்பு பற்றி குறிப்பிட்டதை வரவேற்பதாக கூறினார். மத்தியில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்த திட்டத்தை முதலில் நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். அரசியல் பற்றி நிருபர்கள் கேட்டபோது, இது தேர்தல் நேரம் என்பதால் அரசியல் பேசவிரும்பவில்லை என்று கூறி, தவிர்த்தார்.
பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையை ஆதரித்ததன் மூலம் தனது அரசியல் நிலைப்பாட்டை மறைமுகமாக தனது ரசிகர்களுக்கு அவர் உணர்த்தியிருப்பதாகவே தெரிகிறது. ஏனெனில், எந்த கட்சி நதிநீர் இணைப்புக்கு முன்னுரிமை தருகிறதோ அதை ஆதரியுங்கள் என்று அவர் ஏற்கனவே கூறியிருந்தார்.
எனினும் நேரடியாக பா.ஜ.க. அணிக்கு அவர் ஆதரவு தெரிவிக்கவில்லை. இதன் மூலம், வழக்கம் போல் பட்டும் படாமல் தனது நிலைப்பாட்டை அவர் சூசகமாக தெரிவித்து இருப்பது, சினிமாவில் வரும் கவுண்டமணியில் “ஈயம் பூசின மாதிரியும் இருக்கணும்; பூசாத மாதிரியும் இருக்கணும்” என்ற வசனத்தை நினைவு படுத்துவதாகவே உள்ளதாக, பலரும் பேசிக் கொள்கிறார்கள்.
இதற்கிடையே, ரஜினியின் இந்த அறிவிப்புக்கு பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அமீத் ஷா ஆகியோர் இருப்பதாக, அரசியல் வட்டாரத்தில் மற்றொரு பேச்சு நிலவுகிறது. அதனால் தான், படப்பிடிப்புக்கு செல்லும் முன் தனது அரசியல் நிலைப்பாட்டை மறைமுகமாக சொல்லிவிட்டு புறப்பட்டிருக்கிறார் என்று, அவர்கள் கூறுகின்றனர்.