டெல்லியில் காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல்காந்தி -டிஸ்கஸ்

Publish by: --- Photo :


பாராளுமன்ற தேர்தலில் பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு மாநில கட்சிகளுடன் சுமூகமான கூட்டணி அமையவில்லை. காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளை கேட்டதுதான் கூட்டணி உடன்பாடு ஏற்படாமல் போனதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

டெல்லியில் மொத்தம் 7 பாராளுமன்ற தொகுதிகள் இருக்கின்றன. அங்கு ஆளுங் கட்சியாக உள்ள ஆம்ஆத்மி கட்சியுடன் கூட்டணி சேர காங்கிரஸ் விரும்பியது. ஆனால் காங்கிரஸ் 4 தொகுதிகளை கேட்டதால் ஆம்ஆத்மி கூட்டணிக்கு சம்மதிக்க வில்லை.

இதனால் தனித்து போட்டியிடும் நடவடிக்கைகளில் ஆம்ஆத்மி ஈடுபட்டுள்ளது. இதற்கிடையே ஆம் ஆத்மியுடன் சேர காங்கிரஸ் தலைவர்கள் சிலர் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்கள்.

இதுபற்றி இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டெல்லியில் ஆலோசனை நடத்தினார். டெல்லி காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகளுடன் அவர் ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைப்பது பற்றி விவாதித்தார்.
டெல்லி காங்கிரஸ் தலைவர்களில் ஒருசாரார் ஆம் ஆத்மிக்கு ஆதரவாகவும், மற்றொரு தரப்பினர் ஆம்ஆத்மிக்கு எதிராகவும் கருத்துக்களை தெரிவித்தனர். எனவே டெல்லியில் ஆம்ஆத்மியுடன் காங்கிரஸ் கட்சிக்கு கூட்டணி உடன்பாடு ஏற்படுமா? என்பது தொடர்ந்து இழுபறியிலே உள்ளது.

காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுமைக்குமான பொதுவான தேர்தல் அறிக்கை வெளியிட திட்ட மிடப்பட்டுள்ளது. இதற்காக தனி குழு அமைக்கப்பட்டு இருந்தது.

அவர்கள் அறிக்கை தயாரித்து கொடுத்துள்ளனர். வருகிற 2-ந்தேதி இந்த தேர்தல் அறிக்கை வெளியிடுவது பற்றியும் இன்று ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இதற்கிடையே கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் ராகுல்காந்தியை போட்டியிட செய்ய முயற்சி நடந்து வருகிறது. கேரள மாநில காங்கிரஸ் தலைவர்கள் இது தொடர்பாக ராகுல்காந்தியை வலியுறுத்தி வருகிறார்கள்.

இது தொடர்பாகவும் இன்று ராகுல்காந்தி காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் விவாதித்தார். எனவே ராகுல்காந்தி வயநாட்டில் போட்டியிடுவாரா? என்பது இன்று மாலை தெரிந்து விடும்.


Leave a Reply