செந்தமிழைத் தனது அடையாளமாகவும் கொண்டவன் தண்டாயுதபாணி!

ஞானத்தை உருவாகவும், செந்தமிழைத் தனது அடையாளமாகவும் கொண்டவன் தண்டாயுதபாணி. அறுசுவைகளை எழுத்துக்களில் நாம் சொல்லிவிடலாம். ஆனால், அதை உணர்வது, உணர்த்துவது அவரவர் புலன்கள் மட்டுமே, அதைப்போல அருளைப் பெற வேண்டுமானால் சமயம் (சமையல்) உணர்த்தும் (பக்குவம்) பக்தி நிலைகளை கடைபிடித்து உய்த்துணர்தல் வேண்டும். அவ்வையார் என்ற தமிழ் பெருமாட்டிக்கு செருக்கு வந்தபோது நாவல் பழத்தின் மூலம் ஞானத்தை ஊட்டியவன் முருகப்பெருமான். நாம் பெற்ற கல்வியும், ஞானமும் உள்ளத்து உணர்வையும், மெய்ப்பொருளையும் தருபவன் முருகன். அஞ்ஞானத்தை போக்கி மெய்ஞானத்தை தந்து சிற்றின்பத்தைப் போக்கி வீடுபேறு என்கிற பேரின்பத்தை தருபவன் முருகன்.

மமதை என்பது வரும்போது சிறு பிழைகள்கூட துன்பத்தில் ஆழ்த்திவிடும் அந்த மாய வலையில் சிக்காது இருக்க வேண்டும் என்றால் நிர்மலனான கூர்வேலன் ஒருவனின் பெரும் துன்பத்தை துடைக்கும் பேரருளை வழங்கமாட்டான். அறிவழிந்து தற்போதைய சுகத்தை மட்டும் விரும்புபவர்கள் மற்றவர்கள் மீதும் அவர்களின் இன்பத்தின் மீதும் பழிதூற்றுபவர்களை முருகன் எப்போதும் தண்டாயுதம் கொண்டு தட்டியே வைப்பான். “எந்தாயுமெனக் கருட் தந்தையுநீ சிந்தா குலமானவை தீாத்தெனையாள்” என்று நினைக்கும்போது மட்டுமே நம்மை நயமுற காப்பான் முருகன்.


பழிதூற்றுவதோ துன்புறுத்துவது குறித்தோ நினையாதிருத்தல் வேண்டும். அவனின் திருவடி சிறப்பை நினைக்கும் போது “நாள் என் செய்யும்? வினைதான் என்ன செய்யும்? எனை நாடி வந்த கோள் என் செய்யும்? கொடுங்கூற்று என் செய்யும்? என்கிற நம்பிக்கையோடு உறங்கலாம், கடம்ப மலரின் காட்சியாய் கண்ணில் குளிர்ச்சியாய் வீற்றிருப்பவன்.

தன்னலம் கருதாது பிறர் துயரினை நீக்குபவன் அதர்மங்களை அழிப்பவன். தனது பகைவர்களை அழித்ததோடு மட்டுமல்லாமல் , பிறரின் துன்பத்திற்கு காரணமாய் விளங்கிய அசுரர்களை அழித்தவன் ஞானபலத்தோடு செருக்குடன் நடந்தவர்களின் சிந்தைகளில் நிலைநின்று பேராசைகளையும் அழித்தவன். தன்னை நம்புபவர்களை காப்பதோடு, நல்லறிவைப் போதிப்பவனாகவும், பிரணவத்தின் பொருளைத் தந்தை சிவபெருமானுக்கும் அறிவுறுத்தியவனாகவும் இருப்பவனின் பாதம் பணிந்து வணங்கி நல்லருளைப் பெறுவோம்.


Leave a Reply