--- --:--:-- --

நடைப்பயிற்சியை விட நற்குணமே பெரிது: திருப்பூரில் வாயில்லா ஜீவன்களின் பசியாற்றும் ‘கேபிள் விஜயன்’!

4c1b2b01-57e7-4669-84c0-28cc596a8532

பொதுவாக மனிதர்கள் தங்கள் உடல்நலனைப் பேணவே அதிகாலையில் நடைப்பயிற்சி மேற்கொள்வார்கள். ஆனால், திருப்பூரைச் சேர்ந்த ஒருவர், தன் உடல்நலனை விடவும் சாலையோர ஜீவன்களின் பசிப்பிணியைப் போக்குவதையே தனது முதன்மை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருவது காண்போரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

திருப்பூர் அரசு சிக்கனா கலைக்கல்லூரி வளாகத்திற்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் நடைப்பயிற்சிக்காக வந்து செல்கின்றனர். அவர்களில் ஒருவராக வரும் ‘கேபிள் விஜயன்’ என்பவர், கையில் ஒரு கூசாவில் இரண்டு லிட்டர் பாலும், ஒரு பண்டல் பிஸ்கட் பாக்கெட்டுகளுடனும் வருவதுதான் தற்போதைய பேசுபொருள்.

அன்பிற்கு ஏங்கும் பிஞ்சு குட்டிகள்

அந்த வளாகத்தின் ஒரு ஓரத்தில் தாயை இழந்து தவிக்கும் சுமார் 6 முதல் 7 பிஞ்சு நாய்க்குட்டிகள் பசியால் அழுதுகொண்டிருந்ததைக் கண்டு அவரது மனம் பொறுக்கவில்லை. கடந்த 45 நாட்களாகத் தொய்வின்றி, நாள்தோறும் அதிகாலையில் அந்த குட்டிகளுக்காகவே பால் மற்றும் பிஸ்கட்டுகளைத் தயாரித்துக் கொண்டு வருகிறார் விஜயன்.


“தாய் இல்லாமல் இந்த பிஞ்சு குட்டிகள் பசியால் கத்துவதைக் கண்டு என் மனம் பொறுக்கவில்லை. அதனால்தான் தினமும் 2 லிட்டர் பாலும், 10 முதல் 15 பிஸ்கட் பாக்கெட்டுகளும் கொண்டு வந்து இவற்றுக்கு உணவளிக்கிறேன். இப்போது உடற்பயிற்சி செய்வதை விட, இந்த ஜீவன்களின் பசியாற்றுவதே எனக்கு முதன்மையான கடமையாகிவிட்டது” என்று நெகிழ்ச்சியோடு கூறுகிறார் விஜயன்.

 

நன்றியோடு துள்ளிக் குதிக்கும் ஜீவன்கள்

விஜயன்  வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கும் அந்த நாய்க்குட்டிகள்,  அவரை கண்ட மாத்திரத்திலேயே வாலையாட்டி, துள்ளிக் குதித்து ஓடிவந்து தங்களது நன்றியையும், அன்பையும் வெளிப்படுத்தும் காட்சி அங்கே நடைப்பயிற்சி செய்வோரின் கண்களைக் குளிர வைக்கிறது. வெளியில் நின்று எல்லோரும் இவரை வாயாரப் பாராட்டாவிட்டாலும், இவரது மனிதநேயத்தைக் கண்டு மனதார வாழ்த்திப் பாராட்டாதவர்களே அங்கு எவருமில்லை.

வாழ்க உங்களது மனிதநேயம்!

 

மன்னுயிர் ஓம்பி அருளுள்வார்க்கு இல்லென்ப தன்னுயிர் அஞ்சும் வினை.”
(எல்லா உயிர்களையும் காப்பாற்றி அருள் செய்பவர்களுக்குத் துன்பம் இல்லை)

தன்னலம் கருதாது, வாயில்லா ஜீவன்களின் அழுகுரலுக்குச் செவிமடுத்து, தன் சொந்தச் செலவில் கடந்த ஒன்றரை மாதங்களாக இந்த அறப்பணியைத் தொடர்ந்து வரும் கேபிள் விஜயன்  அவர்களுக்கு நமது  இதழ் சாா்பாக மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்!

மனிதநேயம் என்பது மனிதர்களுக்குள் காட்டும் அன்பில் மட்டுமல்ல, பசியால் தவிக்கும் பிற உயிர்களிடமும் காட்டும் கருணையில்தான் வாழ்கிறது என்பதை உணர்த்தியுள்ளார் விஜயன். உங்களது இந்த நற்பணி தொய்வின்றித் தொடரட்டும்! உங்களைப் போன்ற நல்ல உள்ளங்களால் தான் இந்த உலகம் இன்னும் அழகாக இருக்கிறது!

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon