தவெக தலைவர் விஜய் இன்று டெல்லி பயணம்!
கரூர் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு நாளை ஆஜராக தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியிருந்த நிலையில், ஒரு நாள் முன்னதாக இன்று மாலையே அவர் டெல்லிக்கு செல்கிறார். கரூரில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி விஜய் மேற்கொண்ட பரப்புரை கூட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் என 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக, கடந்த ஜனவரி மாதம் 12 மற்றும் 19 ஆம் தேதிகளில் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜயிடம் விசாரணை நடந்தது. இந்நிலையில், டெல்லி சிபிஐ அலுவலகத்தில் மார்ச் 10ஆம் தேதி மீண்டும் ஆஜராக வேண்டும் என்று விஜய்க்கு, சிபிஐ சம்மன் அனுப்பியது. ஏற்கெனவே திட்டமிட்ட பணிகள் இருப்பதால் விஜய் விலக்கு கோரிய நிலையில், நாளை மீண்டும் ஆஜராக புதிய சம்மன் அனுப்பப்பட்டது.
அதேசமயம், சென்னையில் ஆஜராக அனுமதி கோரியதையும் சிபிஐ நிராகரித்தது. இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக, நாளை டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜராகிறார். இதற்காக ஒரு நாள் முன்னதாக, இன்று மாலை 3 மணியளவில் விஜய் டெல்லி புறப்படுகிறார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




