திருப்பூர்: உலக புகழ் பெற்ற சிற்பக்கலைக்கூடம்..!
திருப்பூர் அடுத்துள்ள திருமுருகன்பூண்டி ஊரானது கற்களில் சாமி சிலைகள் செய்வதில் உலக புகழ் பெற்றது. இங்கு 150 க்கும் மேற்பட்ட சிற்பக்கலைக்கூடங்கள் உள்ளன. இதன்முலம் தினமும் அனைத்து சாமி சிலைகள், அரசியல் தலைவர்கள், தூண்கள், பல்வேறு விலங்குகள் உள்பட விதவிதமான சிலைகள் செய்யப்படுகிறது.
இதில் சாமி சிலைகள் இந்தியா முழுவதும் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இலங்கை, அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், பர்மா போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த சிற்பங்கள் செய்வதற்கான கற்கள் திருப்பூரில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஊத்துக்குளியில் உள்ள கல்குவாரிகளில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டு பின்னர் திருமுருகன்பூண்டி க்கு கொண்டுவரப்பட்டு சாமி சிலைகள் பிரத்யேகமாக செய்யப்பட்டு வருகிறது.
ஊத்துக்குளியில் இருந்து வெட்டி எடுக்கப்படும் கற்கள் மட்டுமே சாமி சிலைகள் செய்வதற்கு ஏற்றது என்பது குறிப்பிடத்தக்கது. திருப்பூர், திருமுருகன்பூண்டி – பூலுவப்பட்டி ரிங்ரோட்டில் மாதேஸ்வரன் கோவில் பின்புறம் ஸ்ரீ திருமகள் சிற்பக் கலைக்கூடத்தை நிறுவி நடத்தி வருபவர் வீரபத்திரன் மகன் சிவகுமார் (வயது 45). சிலைகள் செய்வதில் புகழ்பெற்ற சிற்பியான அவர் நான்காவது தலைமுறையாக கற்களில் சிற்பங்களை செதுக்கி வருகிறார். தற்போது ஸ்ரீ திருப்பதி வெங்கடாசலபதி (பெருமாள்) சிலையை செதுக்கியுள்ளார்.

இதுகுறித்து சிற்பி சிவகுமார் கூறியதாவது: இந்த சிலை செய்வதற்காக நாங்கள் ஊத்துக்குளி, பெட்டிக்கடை பகுதியில் உள்ள ஈஸ்வரன் கல்குவாரியில் 4 டன் எடை கொண்ட கல்லை தேர்வு செய்து லாரி மூலம் பூண்டி கொண்டு வந்தோம். இந்த வேலையை (சிவகுமார்) எனது மேற்பார்வையில், சிற்ப தொழிலாளர்கள் சபரிநாதன், விஜயபாண்டி, கருப்பன், மனோ, சேகர் ஆகியோர் கொண்ட குழுவினர் 12 மாத அவகாசம் கேட்ட நிலையில் காலையிலும், மாலையிலும் என நேரம் கிடைக்கும் போதெல்லாம் வேலை செய்து 11 மாதங்களில் முடித்துள்ளோம்.
இந்த ஸ்ரீ திருப்பதி வெங்கடாசலபதி சிலையானது பீடத்துடன் 7.1/4 அடி உயரமும், 4 அடி அகலமும், 3 டன் எடையும் கொண்டது. சிலையானது சாந்தமாக 4 கைகள் கொண்டதாகவும் அதில் இரண்டு கைகள் சங்கு மற்றும் சக்கரத்தை பிடித்த மாதிரியும், மற்ற இரண்டு கைகளில் ஒரு கை இடுப்பில் வைத்தவாறும், மற்றொன்று ஆசி வழங்குவது போலவும் அமைக்கப்பட்டுள்ளது. தலையில் கிரீடமும், கைகளில் காப்புகளும், உடல் முழுவதும் ஆடை அலங்கார வஸ்திரம் மற்றும் அலங்கார நகைகளுடன் உள்ளது. காலுக்கு இருபுறமும் அவரது மனைவிகள் ஸ்ரீதேவி, பூதேவி உள்ளனர். பீடத்தில் ஆதிகேசவன் என்னும் 7 தலை பாம்பு, வலதுபுறம் ஆஞ்சநேயரும் , இடதுபுறம் கருடனும் உள்ளனர். தலைஉச்சியில் மனிதன் மற்றும் விலங்கு மாதிரி உள்ள யாழி தலையும் உள்ளது.
சிலையின் சிறப்பு அம்சமாக சிலையை திருவாச்சி அமைக்கப்பட்டுள்ளது. இதில் சிவன், பிரம்மன், மச்சவ தாரம், கூர்மாவதாரம், வராஹாவதாரம், நரசிம்மவதாரம், வாமனாவதாரம், ராமாவதாரம், பலராமானவதாரம், கிருஷ்ணாவதாரம், பரசுராமாவதாரம், கல்கி அவதாரம், ஸ்ரீதேவி, பூதேவி, நாகம், சங்கு, சக்கரம், கதை, ஓம், சுவஸ்திகா என் 20 சிலைகள் நுட்பமாக செதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், பெருமாள் சிலை தாமரையில் நிற்பது போலவும் அமைக்கப்பட்டது. முத்தாய்ப்பாக சிலையின் நெஞ்சில் லட்சுமி உருவமும், இடுப்பில் கத்தியும்செதுக்கப்பட்டுள்ளது.
இந்த சிலையானது கோவில் நிர்வாகிகள் வெங்கடேஷ், நாகராஜ், அசோக், நாகேந்திரன் முன்னிலையில் இன்று (29 ந் தேதி) செவ்வாய்க்கிழமை முறையாக பூஜைகள் செய்யப்பட்டு, பாதுகாப்பாக லாரியில் ஏற்றப்பட்டு கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம்,கம்பள்ளி கிராமம்,வெங்கடேஸ்வர சுவாமி திருக்கோவிலுக்கு கொண்டு செல்லப்படுகிறது. வருகிற ஜூன் மாதம் 6,7,8 அன்று நடக்கவுள்ளமகா கும்பாபிஷேகத்தின்போது பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இவ்வாறு சிற்பி சிவகுமார் கூறினார்.






