நீங்களெல்லாம் ஆம்பிளையா..? என்று கேட்டேன்..! ஓபிஎஸ்சை சமாதியில் அமரச் சொன்னதும் நான் தான்..! உண்மையை போட்டுடைத்த “துக்ளக்” குருமூர்த்தி!!
சசிகலாவுக்கு எதிராக, ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து தர்மயுத்தம் தொடங்க ஓபிஎஸ்சுக்கு யோசனை சொன்னது நான் தான் என்று துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி உண்மையை போட்டுடைத்துள்ளது பெரும் சர்ச்சையாகியுள்ளது. குருமூர்த்திக்கு நாவடக்கம் தேவை என அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின், முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார்.ஆனால் சிறிது நாட்களிலேயே கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட சசிகலாவை, முதல்வர் பதவியிலும் அமர வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் உசுப்பேற்றினர். ஜெயலலிதா போல் கட்சியும், ஆட்சியும், ஒரு வரின் கையில் இருக்க வேண்டும் என சசிகலா ஆதரவு அமைச்சர்கள் தூபம் போட்டனர். இதனால் ஓபிஎஸ்சை போயஸ் கார்டனுக்கு வரவழைத்து, முதல்வர் பதவியை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தனர். அது மட்டுமின்றி சசிகலா தான் முதல்வராக வேண்டும் என ஓபிஎஸ் வாயாலேயே கூற வைத்தனர். வேறு வழியின்றி முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, போயஸ் கார்டனை விட்டு வெளியேறிய ஓபிஎஸ், அடுத்த சில நிமிடங்களில் ஜெயலலிதா சமாதி முன் தியானத்தில் அமர்ந்தார்.
சசிகலாவுக்கு எதிராக கண்ணீர் மல்க பேட்டியளித்த ஓபிஎஸ், அதிமுகவைக் காப்பாற்ற தர்மயுத்தம் நடத்தப் போவதாக அறிவித்தார். இதனால் ஓபிஎஸ் பின்னாலும் அதிமுகவினர் அணி திரள, அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. அதன் பின்னர் பல்வேறு கூத்துகள் அரங்கேறின. ஓபிஎஸ் இந்த தர்மயுத்தத்தை நடத்த ஆலோசனை கூறியதே துக்ளக் ஆசிரியரான ஆடிட்டர் குருமூர்த்தி தான் என்று அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா உள்பட பாஜக மேலிடத் தலைவர்களுடன் நல்ல நட்புடன் இருந்த குருமூர்த்தி, பாஜக மேலிடத்தின் ஆலோசனையின் பேரிலேயே ஓபிஎஸ்சுக்கு இந்த ஆலோசனைகளை வழங்கியதாகவும் அப்போது பேசப்பட்டது.
அதன் பின்னர் அதிமுகவில், கூவத்தூர்கூத்து, சசிகலா சிறை சென்றது, எடப்பாடி முதல்வரானது,தினகரன் வகையறாக்கள் கட்டம் கட்டப்பட்டது, ஓபி எஸ் – இபிஎஸ் அணிகள் இணைந்தது என ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்து விட்டது. கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியும் நீடித்து வருகிறது.
நீ ஆம்பளையா ..? என ஓபிஎஸ்சை கேட்டேன். குருமூர்த்தி பேசிய வீடியோ
இந்நிலையில் திருச்சியில் நேற்று நடந்த துக்ளக் இதழின் பொன்விழா கொண்டாட்ட நிகழ்ச்சியில், குருமூர்த்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஓபிஎஸ்சிடம் இருந்து முதல்வர் பறிக்கப்பட்டு,சசிகலா முதல்வர் பதவியேற்பதற்காக சென்னை பல்கலைக்கழக மண்டபம் தயார் செய்யப்பட்டு வந்தது. ஓபிஎஸ்சையே அந்த ஏற்பாடுகள் சரிவர நடக்கிறதா? என்று பார்க்குமாறு கூறியுள்ளனர். அப்போதுதான் என்ன செய்வது எனக் கேட்டு ஓபிஎஸ் என்னிடம் வந்தார். நான் கோபமாகி, நீ ஆம்பளையா ..? என ஓபிஎஸ்சை கேட்டேன். பின்னர், நேராக ஜெயலலிதா சமாதியில் போய் உட்காருங்கள்; வழி பிறக்கும் என்றேன். அதன்படி மாற்றம் ஏற்பட்டது. அதன் பின் அதிமுகவை ஒருங்கிணைத்தேன் என்று குருமூர்த்தி, நேற்று திருச்சியில் பேசி, உண்மையை போட்டுடைத்தார்.அது மட்டுமின்றி தற்போதைய நிலையில் ரஜினி அரசியலுக்கு வர வேண்டியது அவசியம். அவர் வந்தால் அரசியல் மாற்றம் நிகழ்வது உறுதி என்றும் குருமூர்த்தி பேசினார்.
குருமூர்த்தியின் இந்தப் பேச்சு, இப்போது பெரும் சர்ச்சையாகி அதிமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.குருமூர்த்தியின் இந்தப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், குருமூர்த்தியின் பேச்சு ஆணவத்தின் உச்சகட்டம். அவருக்கு நாவடக்கம் தேவை என்று எச்சரிக்கும் விதமாக குருமூர்த்தியை விமர்சித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று திருச்சியில் தாம் பேசியது குறித்து குருமூர்த்தி விளக்கமளித்துள்ளார். ஓபிஎஸ்சை விமர்சித்து தாம் எதுவும் பேசவில்லை. துணிச்சல் இல்லாமல் இப்படி சசிகலா காலில் அதிமுகவினர் விழலாமா? என்ற ரீதியில் தான் பேசினேன். ஓபிஎஸ் மீது தமக்கு எப்போதும் மரியாதை உண்டு என்று கூறி குருமூர்த்தி ஒரே பல்டி அடித்து பின் வாங்கியுள்ளதும், இந்த விவகாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




