--- --:--:-- --

ஜனநாயகத்தூணுக்கு அச்சுறுத்தல்: மதுரை மாநகராட்சியில் நிருபர்கள் மீது கொடூரத்தாக்குதல் ! பதவியால் ஆட்டம் போடுபவர்களால் திமுகவுக்கு சிக்கல்!!

dfsd

முதலமைச்சர் ஸ்டாலின் அரசுக்கும், கட்சிக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில், மதுரை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில், திமுக இன்று ரவுடித்தனத்தை அரங்கேற்றினர்; செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தி, தாங்கள் இன்னமும் ‘பழைய’ திமுகதான் என்பதை நிரூபித்தனர். இது, தமிழக அளவில் கொந்தளிப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

 

துரை மாநகராட்சியில், 2022-23 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக இன்று (11.05.2022) காலை 11.30 மணியளவில் தொடங்கியது. அதிமுக உறுப்பினர்கள் 15 பேருக்கு மட்டும், தனியாக இருக்கை ஒதுக்கி தருமாறு, கடந்த காலங்களில் மன்றத்தில் அவர்கள் வைத்த கோரிக்கைக்கு பலன் இல்லாத நிலையில், இன்று காலை அவர்களாகவே 15 இருக்கைகளை தேர்வு செய்து, வரிசையாக அமர்ந்து கொண்டனர்.

 

இதனால், திமுக உறுப்பினர்கள் ஆவேசமடைந்தனர். மேயர் இந்திராணி , ஆணையாளர் வருகை தராதநிலையில், இருக்கை ஒதுக்கீடு தொடர்பாக திமுக – அதிமுக உறுப்பினர்களுக்கான காரசார விவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.

 

ஒரு கட்டத்தில், திமுக உறுப்பினர் ஒருவர், அதிமுக உறுப்பினர்கள் அமர்ந்திருந்த இருக்கையின் மீது ஏறி நின்று வாக்குவாதம் செய்தார். தொடர்ந்து, அதிமுக உறுப்பினர்களை வெளியேறுமாறு, திமுக உறுப்பினர்கள் எழுப்பிய கோஷத்தால், மன்றத்திற்குள் பதற்றமான சூழல் நிலவியது. பின்னர், அதிமுக உறுப்பினர்கள் அனைவரும், எதிர்க்கட்சித் தலைவர் சோலைமுத்து தலைமையில் புகார் அளிப்பதற்காக, மேயர் இந்திராணியின் அறைக்கு சென்றனர்.

 

அப்போது, அதிமுக உறுப்பினர்களை பின்தொடர்ந்து சென்று, நிருபர்கள் செய்தி சேகரிக்க சென்றனர். அந்த நேரத்தில், மேயர் அறை முன்பாக இருந்த திமுகவை சேர்ந்த சிலர், திடீரென நிருபர்களை தடுத்தனர். அதற்குள், மற்றொரு அறையில் இருந்த மேயரின் கணவர் பொன் வசந்த் மற்றும் அவரது ஆதரவாளர்கள் என்று கூறிக்கொண்ட சிலர், செய்தியாளர்களை நோக்கி வந்தனர். எதற்காக மேயர் அறைக்கு செல்கிறீர்கள் என்று கேள்வி கேட்டனர்.

 

இதுதான் திராவிட மாடலா?

செய்தி சேகரிக்கவே அதிமுக உறுப்பினர்களை பின்தொடர்வதாக பத்திரிகையாளர்கள் கூறியும், அதையெல்லாம் திமுகவினர் பொருட்படுத்தவில்லை. மேயர் அறையில் உங்களுக்கு என்ன வேலை? என்று கேட்டபடி, நிகழ்வுகளை படம் பிடித்துக் கொண்டிருந்த செய்தியாளர்களின் கேமிராவை காலால் எட்டி உதைத்து உடைத்தனர். செய்தியாளர்களை ஒருமையில் பேசியும், திட்டியும் அவமதித்துள்ளனர். இதில், இரு டிவி கேமிரா மேன்களுக்கு தலை மற்றும் உடல் பகுதியில் லேசான காயம் ஏற்பட்டது.

இதை சற்றும் எதிர்பார்த்திராத செய்தியாளர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். ஜனநாயகத்தின் நான்காவது தூணாக கருதப்படும் பத்திரிகையாளர்களை, திமுகவினர் அவமதித்து தாக்கிய அராஜகச் செயலை கண்டித்து, உடனடியாக மேயர் அறை முன்பாக அமர்ந்து, செய்தியாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

 

மேயர் அறையில், அவரது கணவருக்கு என்ன வேலை? செய்தியாளர்களின் பணியை அவரும், திமுகவினரும் எப்படி தடுக்கலாம்? என்று, செய்தியாளர்கள் ஆவேசம் பொங்க கேட்டனர். மேயரின் கணவர் உள்ளிட்ட திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோஷமிட்டனர்.

 

மதுரை மாநகராட்சி மேயர் அறையானது, தொடர்பே இல்லாத சில ரவுடிகளின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், மேலும் திமுக பெண் மாமன்ற உறுப்பினர்களின் கணவர், உறவினர்கள் முழுவதிலுமாக, அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதாகவும் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர்.

 

இதனிடையே, நிலமை விபரீதமானதை புரிந்து கொண்ட திமுகவினர், செய்தியாளர்களிடம் சமாதானம் பேசினர். மேயரின் கணவர் பொன் வசந்த், செய்தியாளர்களிடம் இனி இதுபோல் நடக்காது. நடந்த சம்பவத்துக்கு வருந்துவதாகக் கூறினார். இதன் பின்னரே, அங்கு இயல்பு நிலை திரும்பியது.

 

திமுகவினர் செய்தியாளர்களை தாக்கிய களேபரம் ஓய்ந்து, ஒன்றரை மணி நேரம் தாமதமாக, மதுரை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது பேசிய மேயர் இந்திராணி, “செய்தியாளர்கள் தொடர்பாக எதிர்பாராத சம்பவம் நடந்துவிட்டது. தாக்கியவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். இச்சம்பவத்துக்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

 

தமிழகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு பதவிக்கு வந்து ஓராண்டு ஆகிறது. மக்களுக்கு நல்லாட்சி தர வேண்டுமென்ற நோக்கில், அவர் செயல்பட்டாலும், கீழ் மட்டங்களில் திமுகவினர் இன்னமும் ‘பழைய’ பாணியிலேயே, அராஜக போக்குடன் திரிவதாக பரவலாக குற்றச்சாட்டு உள்ளது.

 

உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்டவை முடிந்ததும், பல இடங்களில் திமுகவினர் ஆங்காங்கே தங்களது ‘ஆட்டங்களை’ காட்டத் தொடங்கிவிட்டதாகவும், அதற்கு உதாரணமாக, மதுரை மாநகராட்சியில், செய்தியாளர்கள் மீதே கை வைக்கும் அளவுக்கு அராஜகத்தை திமுகவினர் கட்டவிழ்த்துவிட்டுள்ளதாகவும் பலரும் அதிருப்தியுடன் கூறுகின்றனர்.

திமுகவினரின் இத்தகைய போக்கு தொடருமானால், அது முதல்வர் ஸ்டாலினின் ஆட்சிக்கும், கட்சிக்கும் தீராத அவப்பெயரை உண்டாக்கும் என்பதை, திமுக கவுன்சிலர்கள், நிர்வாகிகள் உணர வேண்டும். இல்லாவிட்டால், மூச்சுக்கு மூன்னூறு முறை ‘திராவிட மாடல்’ ஆட்சி என்று பெருமைப்பட்டு கொள்ளும் மு.க. ஸ்டாலின், திமுகவினரின் அட்டூழியங்களை, முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்பதே, அனைவரின் எதிர்பார்ப்பாகும்.


கணவர்களின் ராஜ்ஜியம்!

 

மதுரை மாநகராட்சி உறுப்பினர்கள் சிலர், நமது “குற்றம் குற்றமே” இதழுக்கு அளித்த பேட்டியில், உள்ளாட்சியில் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் தரப்படுவதாக, முதல்வர் ஸ்டாலின் பெருமையோடு கூறுகிறார். ஆனால் இங்கே, பெண் கவுன்சிலர்களின் கணவர் அல்லது உறவினர்களே குறுக்கீடு செய்து, நிர்வாகம் செய்கின்றனர்.

 

குறிப்பாக, திமுக மேயரின் கணவரது செயல்பாடுகளை, அக்கட்சி கவுன்சிலர்களே வெறுக்கும் அளவுக்கு உள்ளது. மேயர் பொம்மையாகவும், அவரது கணவரே அலுவலகத்திற்கு வந்து நிர்வாகம் செய்யுமளவுக்கு உள்ளது. மேயரின் கணவரது தலையீட்டால் தான் எங்களுக்கு இடம் ஒதுக்கப்படவில்லை” என்றனர்.


 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon