திருமண வயதில் மகள் இருப்பதை மறைத்து திருமணம் செய்த பெண்..!
திருமணமான மகள் இருப்பதை மறைத்து ஈரோட்டைச் சேர்ந்த ஒருவரை மணந்து நெல்லையைச் சேர்ந்த பெண் ஒருவர் அவரது வீட்டில் இருந்து பணத்தை திருடிக்கொண்டு தப்பிய நிலையில் போலீசில் சிக்கியுள்ளார். ஈரோடு கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த கதிரவன் என்பவருக்கு 38 வயதாகும் நிலையில் திருமணத்திற்காக பெண் தேடியுள்ளார்.
நண்பர்கள் மூலமாக தில்லை என்பவரின் தொடர்பு எண் கிடைத்து அவர் மூலம் 37 வயதான கவிதா என்ற பெண் அறிமுகமாகியுள்ளார். அவரும் திருமணத்திற்காக வரன் பார்த்து வருகிறார் என கூறி கதிரவனுக்கும், கவிதாவுக்கும் கடந்த மாதம் திருமணம் செய்து வைத்து தம்பதி உடன் தில்லை தங்கியிருந்துள்ளார்.
ஒரு மாதம் கடந்த நிலையில் சனிக்கிழமை காலை திடீரென தில்லையும், கவிதாவும் மாயமாகியுள்ளனர். வீட்டில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் பணமும் மாயமாகியுள்ளது. நெல்லை சென்ற கதிரவன் இருவரையும் தேடி கண்டுபிடித்து போலீசில் ஒப்படைத்தார்.
விசாரணையில் கவிதாவுக்கு திருமணமாகி இரண்டு மகள்கள் இருப்பதும் அவர்களில் ஒருவருக்கு திருமணம் ஆகி விட்டதும் தெரியவந்தது.





