ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று பதவியேற்பு
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் உட்பட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் இன்று பதவியேற்றுக் கொள்வார்கள் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக நடந்து முடிந்தது.
இந்த தேர்தலில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு போட்டியின்றி மற்றும் போட்டி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு இன்று காலை 10 மணிக்கு அந்தந்த மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் பதவி பிரமாணம் எடுத்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டவர்கள் மட்டுமே வரும் 22ஆம் தேதி நடக்கும் மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத்தலைவர், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர், துணைத் தலைவர், கிராம ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடவோ பங்களிக்கவோ அல்லது வாக்களிக்க தகுதி உடையவர்கள் எனவும் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.






