அலங்காநல்லூரை அதிர வைக்கும் ஜல்லிக்கட்டு தொடங்கியது..!
மதுரை ஜல்லிக்கட்டு திருவிழாவின் மூன்றாம் நாள் உச்ச விழா அலங்காநல்லூரில் தொடங்கியது. மதுரையில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். பொங்கலை முன்னிட்டு முதல் நாள் அவனியாபுரத்திலும், 2வது நாள் பாலமேட்டிலும், 3வது நாள் அலங்காநல்லூரில் நடைபெறுவது வழக்கம். ஏற்கனவே 2 நாட்கள் அவனியாபுரத்திலும், பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடந்து முடிந்து பரிசுகள் வழங்கப்பட்ட நிலையில் இன்று அலங்காநல்லூரில் நடைபெறுகிறது.
அரசு சார்பில் நடத்தப்படும் இந்த ஜல்லிக்கட்டு விழாவை காலை 7 மணிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பச்சை கொடி காட்டி துவக்கி வைத்தார். உடன் அமைச்சர்கள், எம்பி, எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டனர். தொடர்ந்து அமைச்சர் உதயநிதி மற்றும் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் மாடு பிடி வீரர்கள் உறுதி மொழி ஏற்று போட்டியில் களமிறங்கினர். முதலாவதாக களத்தில் வீரங்கொண்டு விளையாடும் அலங்காநல்லூர் முனியாண்டி சுவாமி கோயில் காளை களமிறங்கியது. கோயில் காளைகளை தொடர்ந்து மற்ற ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்துவிடப்படுகிறது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களம் தனித்துவமானது. வழக்கமான ஜல்லிக்கட்டு களங்களை போல நீள் வாக்கிலான அமைப்புக்கு மாறாக “ட” வடிவில் இருப்பதால் மாடுகள் வாடிவாசல் வழியாக வந்து நின்று திரும்பி செல்வதால் அது வீரர்கள் விளையாடுவதற்கு நிறைய வாய்ப்புகளை அளிக்கும். இந்த தனிச்சிறப்பினால் தமிழகத்தின் மிகச்சிறந்த காளைகளும், வீரர்களும் இக்களத்தில் விளையாட அதிக ஆர்வம் காட்டுவர்.
இப்போட்டியில் விளையாட 6099 காளைகளும், 1784 வீரர்களும் முன்பதிவு செய்திருந்த நிலையில், இதில் தகுதியுள்ள 1200 காளைகளுக்கும், 800 வீரர்களுக்கும் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. வெற்றி பெறும் முதல் வீரருக்கும், காளைக்கும் தலா 1 கார் பரிசும், இரண்டாம் வீரருக்கும், காளைக்கும் பைக் பரிசாக வழங்கப்படுகிறது.
சிறப்பாக விளையாடும் காளையர்களுக்கும், காளைகளுக்கும் தங்கம், வெள்ளி நாணயங்களும், பீரோ, டிவி, கட்டில் உள்ளிட்ட பல்வேறு வீட்டு உபயோக பொருட்களும் பரிசாக வழங்கப்படவுள்ளன. பார்வையாளர்களுக்கு அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்க இரண்டடுக்கு கம்புகள் வைத்து தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட எஸ்.பி தலைமையில் சிசிடிவி கேமரா கண்காணிப்புடன் 1500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




