தமிழ் நாட்டு மக்களின் உணர்வுகளை தொடர்ந்து ஆளுநர் கொச்சைப்படுத்திகிறார் – கனிமொழி
தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடரின் தொடக்கத்தில் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக அவையிலிருந்து வெளியேறினார்.
இந்த சம்பவம் சர்ச்சையான நிலையில், தமிழ்நாட்டையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநரை கண்டித்து இன்று காலை 10 மணியளவில் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆர்.எஸ். பாரதி, கனிமொழி, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய கனிமொழி, ”சட்டப்பேரவையில் மூன்றாவது முறையாக உரையை புறக்கணித்ததன் மூலம் ஆளுநர் ஹாட்ரிக் அடித்திருப்பதாக” விமர்சித்தார். ”அவையில் தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலில் பாடப்படும்” என்று கூறிய கனிமொழி, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை தொடர்ந்து ஆளுநர் கொச்சைப்படுத்தி வருவதாகக் குறைகூறினார்.
இதையடுத்து பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ”ஆளுநர் ஆர்.என்.ரவி ஆணவமாகவும், திமிராகவும் செயல்பட்டு வருகிறது. தேசிய கீதத்தை அவமதித்தவர் அவர்தான். இந்தியாவின் தலைசிறந்த முதலமைச்சராக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார். அதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் ஆளுநர் இவ்வாறு செயல்படுகிறார்.
ஆளுநர் தகராறு செய்யச் செய்ய முதல்வர் புகழ் உச்சமடையும்” என்று தெரிவித்தார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய எம்.பி தயாநிதி மாறன், ”ஒற்றை குரலில் தமிழ்நாட்டின் மாண்பை சீர்குலைக்கும் ஆளுநரை எதிர்த்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்தியாவின் தலைசிறந்த மாநிலம் தமிழ்நாடு, இந்தியாவின் தலைசிறந்த முதல்வர் நம்முடைய முதல்வர். தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலில் பாடப்படும் இதுதான் எங்கள் பாரம்பரியம்” என்றார்.





