15 ஆயிரம் கடனுக்காக மகளை திருமணம் செய்து வைத்த கொடுமை! நடந்தது என்ன?
வெறும் 15 ஆயிரம் ரூபாய் கடனுக்காக கடன் தந்தவரின் மகனை கொண்டே பாலியல் வன்கொடுமை செய்யவைத்து 13 வயது மகளை திருமணம் செய்து வைத்த கொடூரம் கரூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமியின் தந்தை குஜிலியம்பாறை சேர்ந்த மூக்கன் என்பவரிடம் 15,000 ரூபாய் கடன் வாங்கியுள்ளார். பணத்தை திருப்பித் தரமுடியாத நிலையில் மூக்கன் உடன் நடந்த பேச்சுவார்த்தையில் இரு குடும்பத்தினரின் ஒப்புதலுடன் கடந்த ஜூன் மாதம் 26ஆம் தேதி 13 வயது சிறுமியை மூக்கனின் 23 வயதான மகனான சரவணகுமார் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
அடுத்த நாள் இருவருக்கும் திண்டுக்கல் பெருமாள் கோவிலில் வைத்து சிறுமியின் பெற்றோர் மற்றும் சரவணகுமாரின் பெற்றோர் உள்ளிட்ட 20க்கும் அதிகமானோர் கூடி கட்டாயத் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் சிறுமி ஓரிரு நாட்களுக்கு முன்பு கொடுத்த புகாரையடுத்து குழந்தை திருமண தடைச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் சரவணகுமார் மற்றும் அவரது பெற்றோர் சிறுமியின் பெற்றோர் கைது செய்யப்பட்டனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இவர்கள் 5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களை காவல்துறை வாகனத்தில் ஏற்றும்போது அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக காவல்துறையினரே வாகனத்தின் அருகே கொசு மருந்து அடிக்க வைத்து அந்த ஐந்து பேரையும் அழைத்து சென்ற விநோதமும் நடந்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




