7 தொகுதிகளில் தேர்தல் ரத்தா? தலைமைத்தேர்தல் அதிகாரி விளக்கம்!

தமிழக சட்டப்பேரவையின் 234 தொகுதிக்கும் நாளை தேர்தல் நடக்கும்; 7 தொகுதிகளுக்கு தேர்தல் ரத்தாகலாம் என்ற தகவல் உண்மைக்கு புறம்பானது என்று, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

 

தமிழக சட்டப்பேரவைக்கும், புதுச்சேரி சட்டப்பேரவைக்கும் நாளை ஒரே கட்டமாக தேர்தல் நாளை நடைபெற இருக்கிறது. கடந்த ஒரு மாதமாக அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வந்த அனல் பறக்கும் பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. எனினும், இரவு நேரங்களில் தொகுதி வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணப்பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்தன.

 

அதிலும் குறிப்பாக சென்னை, கோவை, சேலம் மற்றும் திருப்பூர் உள்ளிட்ட தொகுதிகளில் அதிகளவில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் ரூ.57.70 கோடியும், கோவையில் ரூ.55.48 கோடியும், சேலத்தில் ரூ.44.88 கோடியும், திருப்பூரில் 15.43 கோடியும் அரசியல் பிரமுகர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

 

இது ஒருபுறம் இருக்க, பணப்பட்டுவாடா அதிகளவில் நடைபெற்று வருவதாகக் கூறி, தமிழகத்தில் கொளத்தூர், சேப்பாக்கம், காட்பாடி, திருச்சி மேற்கு, திருவண்ணாமலை ஆகிய 5 தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்யக்கோரி அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் முறையிடப்பட்டது. அத்துடன் சேர்த்து கரூர் உள்பட 7 தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்ய இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக, சமூக வலைதளங்களில் இன்று பிற்பகலில் இருந்தே தகவல்கள் பரவின.

 

இது அரசியல் கட்சியினர் மத்தியில் கவலையையும், வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தையும் ஏற்படுத்தின. ஆனால், தேர்தல் ஆணையம் இதை திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறுகையில், தமிழக சட்டப்பேரவையின் 234 தொகுதிக்கும் நாளை தேர்தல் நடக்கும்; 7 தொகுதிகளுக்கு தேர்தல் ரத்தாகலாம் என்ற தகவல் உண்மைக்கு புறம்பானது என்றார்.


பூத் ஸ்லிப் இல்லாவிட்டாலும் தேர்தலில் வாக்கு போடலாம்: தேர்தல் அதிகாரி

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், பூத் ஸ்லிப் இல்லை என்றாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் வாக்களிக்கலாம் என்று, தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

 

தமிழக சட்டமன்றத்தின் 234 தொகுதிகளுக்கும் நாளை ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 3,998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தலுக்காக 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் இன்று அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டு, வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.

 

இந்த நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ சென்னையில் அளித்த பேட்டி: வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 6.28 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். இவர்களுக்காக, 88,900 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் சுமார் 50 சதவீத வாக்குச்சாவடிகள் வெப் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும். சுமார் 4.17 லட்சம் பேர், வாக்குப்பதிவு நாளில் தேர்தல் தொடர்புடைய பணியில் ஈடுபடுவர்.

 

பூத் சிலிப் இல்லை என்றாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் வாக்களிக்கலாம். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விவிபேட் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

 

நாளை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை இடைவெளியின்றி 12 மணி நேரம் வாக்குப்பதிவு நடைபெறும். வாக்குச்சாவடியில், உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்பட்ட பிறகே வாக்களிக்க அனுமதிக்கப்படும். உடல் வெப்ப நிலை அதிகமாக இருந்தால் மாலை 6மணிக்கு பிறகு வாக்களிக்க அனுமதிக்கப்படும். கொரோனா நோயாளிகளும் மாலை 6 மணிக்கு பிறகு பிபிஇ உடையுடன் வாக்களிக்க அனுமதிக்கப்படும்.

 

சுமார் 10,813 வாக்குச்சாவடிகள் தமிழகத்தில் பதற்றமானவை என்றும், சுமார் 530 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை; வாக்காளர்கள், 1950 என்கிற எண்ணை தொடர்பு கொண்டு வாக்காளர்கள் சந்தேகங்களுக்கு தெளிவு பெறலாம். நேற்று பிற்பகல் 3 மணி வரை சுமார் 428 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என்று அவர் கூறினார்.


ஓட்டுப்பதிவின் போது வாக்காளர்களுக்கு கையுறை! தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்!!

கொரோனா தொற்று அபாயம் கருதி, தேர்தல் நாளன்று வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு தனித்தனியே கையுறை வழங்கப்படும என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

 

தமிழகம், புதுச்சேரி உள்பட ஐந்து மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், தமிழகம், புதுவை, கேரளாவில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையடுத்து தேர்தலுக்கான ஏற்பாடுகளை தமிழக தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளதால், ஆணையத்திற்கு தேர்தல் நடத்துவது ஒரு சவாலாகவே உள்ளது.

 

கொரோனா முன்எச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பாதுகாப்பாக சட்டமன்ற தேர்தலை நடத்தி முடிக்கும் பணியில் இந்திய தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டு உள்ளது.

 

இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

 

தேர்தலுக்கான ஏற்பாடுகளை ஆணையம் செய்து வருகிறது. தேர்தலில் முதல் கட்டமாக, மார்ச் 12ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. மனு தாக்கல் செய்ய வேட்பாளருடன் வர, 2 பேருக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாது.

 

சட்டப்பேரவைத் தேர்தலுக்காக தமிழகத்தில் 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பதிவாகும் வாக்குகள், 76 மையங்களில் எண்ணப்படும். வாக்குச்சாவடிகள் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படும். தேர்தல் விதிமீறல் தொடர்பான புகார்களை பொதுமக்கள் 1950 என்ற இலவச எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு அளிக்கலாம்.

 

கொரோனா பரவும் வாய்ப்பு உள்ளதால், தேர்தல் வாக்குப்பதிவு நாளில் வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்களுக்கு தனித்தனியாக கையுறை வழங்கப்படும். வாக்களிக்கும்போது வாக்காளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும்.

 

வாக்களிக்க வரும் வாக்காளர்களின் உடல்வெப்பநிலை சோதிக்கப்படும். சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியிருக்கும் அளவில் உடல்வெப்பநிலை இருந்தால் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். கொரோனா பாதித்தவர்கள் கடைசி ஒரு மணி நேரத்தில் தற்பாதுகாப்பு உடையில் வந்து வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.