புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார் செந்தில் பாலாஜி..!
காவிரி மருத்துவமனையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். காவல்துறை வாகனங்களின் பாதுகாப்புடன் செந்தில் பாலாஜி சென்ற 108 ஆம்புலன்ஸ் சிறையை சென்றடைந்தது.
வரும் 26 ஆம் தேதி வரை செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. விசாரணை கைதிகளுக்கான முதல் வகுப்பு சிறையில் செந்தில் பாலாஜி இருப்பார் என்று அதிகாரிகள் தகவலை வெளியிட்டுள்ளனர்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது அரசு இல்லத்தில் அமலாக்கத் துறையினர் கடந்த ஜூன் 14-ம் தேதி அதிகாலை கைது செய்தனர்.
அப்போது நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லும்போது, அவர் நெஞ்சு வலிப்பதாகக் கூறியதால், அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.
அங்கு மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோகிராம் பரிசோதனையில், இதயத்துக்குச் செல்லும் முக்கிய ரத்தக் குழாய்களில் அடைப்பு இருப்பது தெரியவந்ததால், அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.
சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவர்களும் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். மருத்துவமனையில் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்திய சென்னை அமர்வு முதன்மை நீதிமன்ற எஸ்.அல்லி, அவரை ஜூன் 28-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார்.
இந்நிலையில், காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல் நிலை சரியானதைத் தொடர்ந்து, திங்கள்கிழமை காவேரி மருத்துவமனைக்கு வந்த சிறை அதிகாரிகள், செந்தில் பாலாஜியை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து புழல் சிறைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.





