ஃபெஞ்சல் புயல் பாதிப்புக்கு ரூ.6,675 கோடி நிவாரணம்..!
ஃபெஞ்சல் புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய சென்னை வந்துள்ள மத்திய குழுவினர் உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விளைநிலங்கள், குடியிருப்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளை ஆய்வு மேற்கொள்ள தமிழகம் வந்த மத்திய குழுவினர், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தினர்.
மத்திய உள்துறை இணைச் செயலாளர் ராஜேஷ் குப்தா தலைமையில் 8 பேர் கொண்ட குழுவில், பொன்னுசாமி, சரவணன், தனபாலன் குமரன், ராகுல் பஸ்கேட்டி, பாலாஜி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சனிக்கிழமை மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர்.
இதற்கிடையே, முதலமைச்சருடனான சந்திப்பின்போது புயல் பாதிப்புகளுக்கு 6 ஆயிரத்து 675 கோடி ரூபாய் நிவாரண நிதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய குழுவிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.





