சென்னை உட்பட தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு..!
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தென் தீபகற்பத்தில் மிகவும் குளிரான மலைவாசஸ்தலமாக உதகை தொடர்வதாகவும், அங்கு நேற்று குறைந்தபட்ச வெப்பநிலை 5 புள்ளி 4 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
உதகையில் கடும் குளிர் நிலவி வரும் நிலையில், இன்றும், நாளையும் மழை காரணமாக இரவு நேர வெப்பநிலை உயர வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார். இரண்டு நாட்களுக்கு தமிழ்நாட்டில் சில பகுதிகளில் பெய்யும் மழை மற்றும் மேகமூட்டம் காரணமாக குறைந்தபட்ச வெப்பநிலை உயரும் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யவும் வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளார்.
முன்னதாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் வரும் 21ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை மற்றும் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்தது. அதேபோல், குறைந்தபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றம் ஏதுமில்லை என்றும் வானிலை மையம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.






