பழனி ரோப் கார் சேவை நாளை ஒரு நாள் நிறுத்தம்..!
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் ரோப் கார் சேவை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை ஒருநாள் மட்டும் நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். அவ்வாறு வரும் பக்தர்கள் படிப்பாதை, யானை பாதை, ரோப் கார் ஆகிய சேவைகள் மூலமாக மலைக்கோவிலுக்கு சென்று வழிபட்டு வருகின்றனர்.
ரோப் கார் சேவை மாதத்திற்கு ஒரு நாளும் வருடத்திற்கு 45 நாட்களும் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் மாதாந்திர பணிக்காக ரோப் கார் சேவை நாளை ஒரு நாள் மட்டும் நிறுத்தி வைக்கப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது, இதனால் பக்தர்கள் மாற்று சேவையை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.






