மதுரை என்.டி.ஏ கூட்டணி பொதுக்கூட்டம் – நுழைவு வாயிலில் இருந்த பெரியார் படம் அகற்றம்
மதுரையில் நடைபெற உள்ள என்.டி.ஏ கூட்டணியில் மாநாடு தொடர்பான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த மாநாடு பந்தலின் நுழைவு வாயிலில் வைக்கப்பட்டிருந்த பெரியார் படம் அகற்றப்பட்டுள்ளது தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும், வரும் சட்டமன்ற தேர்தலுக்காக தீவிரமாக தயாராகி வருகிறது. இதில் தி.மு.க. கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ள நிலையில், வழக்கத்திற்கு மாறாக இந்தமுறை தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க இணைந்துள்ளது.
அதேபோல், அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், தன்னை தி.மு.க.வில் இணைத்துக்கொண்டு பலருக்கும் அதிர்ச்சி கொடுத்தார்.அதேபோல் மறுபக்கம் அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணியில் தொகுதிப்பங்கீடு முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், வரும் மாநாட்டில், இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் என்.டி.ஏ கூட்டணியில் முதல் மாநாடு நடைபெற்ற நிலையில், தற்போது 2-வது மாநாடு நாளை (மார்ச் 1) மதுரையில் நடைபெற உள்ளது. இதற்காக பிரதமர் மோடி 2-வது முறையாக தமிழகம் வர உள்ளார்.
இந்த மாநாடு தொடர்பான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மாநாடு நுழைவு வாயிலில் வைக்கப்பட்டிருந்த பெரியார் படம் நீக்கப்பட்டுள்ளது. மதுரை மண்டேலா நகர் பகுதியில் நடைபெற உள்ள இந்த பொதுக்கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடிக்க அ.தி.மு.க சார்பில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. இதில் நுழைவு வாயிலில், பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகிய மூவரின் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தது. அதேபோல் மாநாடு உள்ளே உள்ள மேடையில் திருப்பரங்குன்றம் கோபுரம் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது நுழைவு வாயிலில் வைக்கப்பட்டிருந்த பெரியாரின் படம் அகற்றப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரப்பூவமான காரணங்கள் என்ன என்று எந்த தகவலும் வெளியாகாத நிலையில், பெரியார் படத்தை வைத்துவிட்டு, தற்போது அதனை அகற்றி இருப்பது, பரப்பரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது,





