“மதுரையை 2-வது தலைநகரமாக அறிவிக்க வேண்டும்”!! அதிமுக சார்பில் தீர்மானம் நிறைவேற்றம்!!
மதுரையை தமிழகத்தின் 2-வது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தின் 2-வது பெரிய நகரமாகவும் தென்மாவட்டங்களின் மையமாகவும் திகழும் மதுரையை தமிழகத்தின் 2-வது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை சமீப காலமாக வலுத்துள்ளது. எதற்கெடுத்தாலும் சென்னைக்கே செல்ல வேண்டியுள்ளதால், நிர்வாக வசதிக்காகவும், பயண நேரத்தை குறைக்கும் வகையிலும் மதுரையை 2-வது நகராக அறிவித்தால் தென்மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியும் முன்னேற்றமடையும் என்பதால் இந்தக் கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.
ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் இது போல் 2 தலைநகரங்கள் உள்ளதை சுட்டிக்காட்டி இந்தக் கோரிக்கை இப்போது வலுப்பெற்றுள்ளது.
மதுரையை தலைநகராக அறிவித்தால், திருச்சி, கரூர், திண்டுக்கல் முதல் தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஒரே நாளில் மதுரை சென்று பணிகளை முடித்து திரும்புவதும் எளிது. ஏற்கனவே மதுரையில் உயர்நீதிமன்ற கிளை அமைந்துள்ளது.
எய்ம்ஸ் ம்ருத்துவமனையும் வர உள்ளது.தலைநகருக்கான அனைத்து அம்சங்களும் மதுரையில் உள்ளது. இதனால் தொழில் வளர்ச்சியும் முன்னேற்றம் அடையும் என்பதால் இந்த கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.
இந்நிலையில், மதுரை அதிமுக புறநகர் மேற்கு மாவட்டம் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று திருமங்கலத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனைகூட்டத்தில் மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான ஆர்.பி உதயகுமார் கலந்துகொண்டார்.
ஆலோசனை கூட்டம் முடிந்த பின், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தமிழகத்தின் 2-ம் தலைநகரமாக மதுரையை உருவாக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த தென்மாவட்ட மக்களின் விருப்பமாக உள்ளது. மதுரையை 2-வது தலைநகரமாக அறிவிக்ககோரி அதிமுக புறநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அரசுக்கு கோரிக்கை விடப்பட்டதாக கூறினார்.






