உள்ளாட்சித் தேர்தல்: முதல்வர் முடிவை மாற்றியது ஏன்?
உள்ளாட்சி தேர்தலில் மேயர் உள்ளிட்ட பதவிகள் நேரடியாக தேர்வு செய்யப்படும் என அறிவித்து இருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திடீரென தனது முடிவை மாற்றிக் கொண்டது ஏன் என திமுக பொருளாளரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் ஒரு மாவட்டத்தை இரண்டாக பிரித்து புதிய பெயரை சூட்டி விட்டாலே அதனை பெரிய சாதனையாக நினைத்துக் கொள்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி என தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்ட தொடக்க விழாவில் பேசிய முதல்வர், அது அரசு விழா என்பதை மறந்து அரசியல் பேசி இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
திமுக தலைவர் மு.க ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது தான் மறைமுக தேர்தலை சட்டமன்றத்தில் தீர்மானமாக அறிமுகப்படுத்தினார் என முதலமைச்சர் தெரிவித்திருப்பது யாரும் கண்டுபிடிக்க முடியாத உண்மை அல்ல என்றும், மேயர் உள்ளிட்ட பதவிகள் நேரடியாக தேர்வு செய்யப்படும் என அறிவித்து இருந்த முதலமைச்சர் திடீரென அந்த முடிவை மாற்றிக் கொண்டது ஏன் என்பதுதான் தற்போதைய கேள்வி என்றும் துரைமுருகன் குறிப்பிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




