ஆயிரம்விளக்கில் குஷ்பு, விருதாச்சலத்தில் பிரேமலதா வேட்புமனு தாக்கல்!!
விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிடும், தே.மு.தி.க., பொருளாளர் பிரேமலதா இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். நடிகை குஷ்பு, பாஜக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 6ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை நிறைவடைகிறது. எனவே, அரசியல் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகிறது.
சட்டப்பேரவைத் தேர்தலில் அ.ம.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க-வுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், அவரது மைத்துனர் சுதீஷ், மகன் விஜயபிரபாகரன் உள்ளிட்டோர், இத்தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால், பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
விருத்தாசலம் தொகுதியில், அ.தி.மு.க., கூட்டணியில், பா.ம.க.,வும்; தி.மு.க., கூட்டணியில் காங்கிரசும் போட்டியிடுகின்றன. 2006 சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தனித்து போட்டியிட்டு,விருதாச்சலத்தில் வெற்றி பெற்றார். அந்த செண்டிமெண்டை மனதில் வைத்து, பிரேமலதா களமிறங்குகிறார்.
இதனிடையே, விருதாச்சலம் தொகுதியில் போட்டியிடும் பிரேமலதா இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். தேமுதிக – அமமுக நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் புடைசூழ, பிரேமலதா வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் அளித்தார். அதை தொடர்ந்து, விருதாச்சலம் தொகுதியிலேயே வீடு எடுத்து தங்கி, தீவிர பிரசாரம் செய்ய அவர் திட்டமிட்டுள்ளார்.
மற்றொரு நட்சத்திர வேட்பாளரான குஷ்பு, சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியானது விஐபிக்கள் அதிகளவு வசிக்கும் தொகுதியாகும். மறைந்த முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா ,கருணாநிதி, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் இத்தொகுதியில் வசிக்கின்றனர்.
இந்த தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் குஷ்பு போட்டியிடுகிறார். திமுக சார்பில் மருத்துவர் எழிலன், அமமுகவை சேர்ந்த வைத்தியநாதன், நாம் தமிழர் ஷெரீன் ஆகியோர் களம் காண்கின்றனர்.
இந்நிலையில் ஆயிரம் விளக்கு தொகுதியில், குஷ்பு இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்.தான் சமர்ப்பித்த ஆவணங்கள், குறிப்பிட்டுள்ள விஷயங்கள் அனைத்தும் உண்மை என்று தேர்தல் அலுவலர் முன்பு, அவர் உறுதி மொழி ஏற்றுக்கொண்டார். அவருடன் பாஜக – அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர். தனது அகராதியில் தோல்வி என்பது இல்லை; நிச்சயம் இத்தொகுதியில் வெற்றி பெறுவேன் என்று குஷ்பு தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




