அரசு அலுவலகத்தில் கோபத்தின் உச்சிக்கு சென்ற கோட்டாட்சியர்..!
மதுரை அருகே கல்குவாரியை மூடுவது தொடர்பாக கிராம மக்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் வருவாய் கோட்டாட்சியர் கோபமடைந்து கோப்புகளை வீசி எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோபத்தில் கொதித்து எழுந்த இவர்தான் மதுரை மாவட்டம் திருமங்கலம் கோட்டாட்சியர் சௌந்தர்யா.
கிராம பிரதிநிதிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையின் போது அவர் கோபத்தின் உச்சிக்கே சென்றார். கோட்டாட்சியர் சௌந்தர்யாவின் இந்த கோபத்திற்கு காரணம் கிராம மக்கள் சார்பாக பேச்சுவார்த்தைக்கு வந்த நபர் கோட்டாட்சியர் மீது வீண்பழி சுமத்திய தாக கூறப்படுகிறது.
கருவெலம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள கல் குவாரிகளை மூட கோரி அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்த நிலையில் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இரு தரப்பையும் அழைத்து கோட்டாட்சியர் சௌந்தர்யா பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போதுதான் கல்குவாரிக்கு ஆதரவாக கோட்டாட்சியர் சௌந்தர்யா துணைபோவதாக குற்றம் சாட்டிய ஒருவர் அதற்கான ஆதாரத்தையும் வெளியிடுவேன் என கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த கோட்டாட்சியர் சௌந்தர்யா ஆதாரத்தை காட்டுங்கள் என கூறியதோடு அரசு அலுவலகம் என்றும் பாராமல் ஆவேசம் அடைந்தார்.
இதனால் பேச்சுவார்த்தையில் எந்தவித தீர்வும் எட்டப்படவில்லை. கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வெளியே குவிந்திருந்த கிராம மக்களை காவல்துறையினர் கலைந்து போகச் செய்தனர். இறுதிவரை கோட்டாட்சியர் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்கான ஆதாரத்தையும் கிராமமக்கள் வெளியிடவில்லை.






