2024 -25 இடைக்கால பட்ஜெட்டில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள்..!
2024-2025 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். 6 வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்த அவர், சரியாக 1 மணி நேரம் பட்ஜெட் உரையாற்றினார். அதன்படி காலை 11 மணிக்கு தொடங்கிய பட்ஜெட் 12 மணிக்கு நிறைவடைந்தது.
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், அடுத்த 5 ஆண்டுகளில் 2 கோடி வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஒரு கோடி வீடுகளில் சூரிய ஒளி மின்சார திட்டம் அமல்படுத்தப்படும். சூரிய மேற்கூரை வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்.
ஆஷா பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் அனைவருக்கும் ஆயுள் காப்பீட்டு திட்டம் வழங்கப்படும். வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். 49,000 சாதாரண ரயில் பெட்டிகள், வந்தே பாரத் பெட்டிகளுக்கு நிகாராக மேம்படுத்தப்படும். மேலும் சில நகரங்களுக்கு மெட்ரோ சேவை விரிவுபடுத்தப்படும்.
வருமான வரி உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை. தற்போதைய வருமான வரி விகிதமே அமலில் இருக்கும்.ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க திட்டங்களை உருவாக்க ரூ.1 லட்சம் கோடி நிதி வழங்கப்படும். கடல் உணவு ஏற்றுமதி கடந்த 10 ஆண்டுகளில் 2 மடங்காக அதிகரித்துள்ள நிலையில், 2 இடங்களில் ஒருங்கிணைக்கப்பட்ட கடல்சார் பூங்கா அமைக்கப்படும்.
517 நகரங்களில் சிறு விமான நிலையங்கள் அமைக்கப்படும். மேலும் 1000 புதிய விமானங்கள் வாங்கப்படும். கர்ப்பப்பை புற்றுநோயை தடுக்க தடுப்பூசி திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
கர்ப்பப்பை புற்றுநோயை தடுக்க 9 முதல் 18 வயது பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும்.வெவ்வெறு பெயர்களில் செயல்படும் மகப்பேறு திட்டங்களை ஒரே திட்டமாக ஒருங்கிணைக்க முடிவு. ஊட்டச்சத்து குறைபாடுகளை அறிய புதிய செயலி அறிமுகப்படுத்தப்படும்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




