--- --:--:-- --

திருப்பூர் தெற்கு முன்னாள் MLA கே.தங்கவேல் கொரோனா  தொற்றால் உயிரிழந்தார்!

திருப்பூர் தெற்கு முன்னாள் MLA கே.தங்கவேல் கொரோனா  தொற்றால் உயிரிழந்தார்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினரும், ஒன்றுபட்ட கோவை மாவட்டச் செயலாளராக, சிஐடியு தொழிற்சங்கத் தலைவராக திறம்பட பணியாற்றியவரும், கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு உறுப்பினரான தோழர் கே.தங்கவேல் Ex., MLA அவர்கள் கடந்த 15 நாட்களாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு கோவையில் உள்ள பி.எஸ்.ஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனளின்றி இன்று அதிகாலை 2.24 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.

 

தோழர் தங்கவேல் இறுதி சடங்கு நிகழ்ச்சி இன்று காலை 10.00 மணிக்கு திருப்பூர், ஆத்துப்பாளையம் ரோட்டில் உள்ள லயன்ஸ் மின்மயானத்தில் நடைபெறுகிறது.

 

இறுதி சடங்கு நிகழ்ச்சியில் அவரது குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். இதைத்தொடர்ந்து திருப்பூர் அவிநாசி ரோட்டில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டத் தலைமை அலுவலகமான, தியாகி பழனிச்சாமி நிலையத்தில் இன்று காலை 11.00 மணிக்கு மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெறுகிறது.

 

திருப்பூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உயிரும், எளிமை, நேர்மை, தியாகம் என்ற வார்த்தைகளுக்கு சரியான அர்த்தமுள்ள மனிதரும் யார் என்றால் தோழர் தங்கவேல் அவர்கள் தான் என்று திருப்பூர் மக்கள் சொல்வார்கள். கடைசி வரை ஓட்டு வீட்டிலேயே வசித்தார். நடந்தும், பேருந்திலும் செல்லும் இடங்களுக்குச் சென்றார். விழாக்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் கட்சி கொடுத்த காரில் எந்த பந்தாவும், பாதுகாப்பும் இல்லாமல் வருவார். புன்னகையும், அன்பும் எப்போதும் அவர் முகத்தில் தழும்பிக்கொண்டே இருக்கும்.

 

1980 – ல் திருப்பூரில் பனியன் தொழிலாளர்கள் போராட்டம் கொழுந்துவிட்டு எரிந்தபோது முதலாளிகள் பலர் ரவுடி தனங்களில் இறங்கியதும் பல தொழிற்சங்கங்களை விலைக்கு வாங்கியதும் நடந்தது. அப்போது அவர்கள் சொன்ன வார்த்தை “என்ன பண்ணுனாலும் இந்தத் தங்கவேலை விலைக்கு வாங்க முடியலையே” என்றதுதான். 180 நாள் போராட்டத்தை தளபதியாய் இருந்து நடத்தி தொழிலாளர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தந்தார். மிகச் சிறந்த தலைவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும், திருப்பூர் மாவட்ட மக்களும் இழந்து தவிக்கிறது என்பது எதார்த்தமான உண்மை.

Leave a Reply

Right Menu Icon