அனுமதியின்றி செயல்படும் சொகுசு விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – கோவை கலெக்டர் எச்சரிக்கை!
கோவை மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்படும் சொகுசு விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்,அதன் உரிமையாளர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கோவை மாவட்டம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து அணுகக்கூடியதும்,சுற்றுலாப்பயணிகள் விரும்பக்கூடியதும்,கலாச்சாரம் நிறைந்த பகுதியாகவும் விளங்கி வருகிறது.மேலும்,சுற்றுலாப்பயணிகளின் வசதிக்காக கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சொகுசு விடுதிகள்,ஹோட்டல்கள்,பண்ணை வீடுகள்,விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.அவ்வாறு அமையப்பெற்றுள்ள அனைத்து விடுதிகளும் விதிமுறைகளின் படி அமைக்க வேண்டும். முறையான அனுமதி பெற்றிருக்க வேண்டும்.தங்களது உரிமம் உரிய காலத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளதா எனவும் சரிபார்க்க வேண்டும்.
மேலும்,விடுதிகளுக்கு அருகில் வசிப்பவர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்தாமலும்,நெறிமுறைகளை மீறாமலும் இருப்பதை அதன் உரிமையாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் விதிகளை மீறியும்,அனுமதி பெறாமல் செயல்படும் விடுதிகளை கணக்கெடுத்து ஆய்வு செய்திட வட்ட அளவில் தாசில்தார்,பி.டி.ஓ,பேரூராட்சி அலுவலர்கள்,நகராட்சி ஆணையர்,காவல் ஆய்வாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும்,அக்குழுவின் கள ஆய்வில் உரிய அனுமதி இல்லாமல் செயல்படும் விடுதிகள் கண்டறியப்பட்டால் சட்டப்படி அதனை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன்,அதன் உரிமையாளர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியாருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் கேரள இளைஞர்கள் மதுவிருந்தும்,தடை செய்யப்பட்ட போதை மருந்துகளை உட்கொண்டதுடன் நள்ளிரவில் சப்தமிட்டு அருகில் வசிக்கும் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதாக கூறி 100 க்கும் மேற்பட்ட இளைஞர்களை கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.அவ்விடுதியை சோதனையிட்டதில் உரிய அனுமதியின்றி செயல்பட்டது கண்டறியப்பட்டதால. கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி உத்தரவின் பேரில் காவல்துறையினர் மூடி சீல் வைத்தனர்.
இந்த நிலையில் கோவை மாவட்ட ஆட்சியரின் இந்த செய்திக்குறிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




