மதுரையில் 21 நாட்களுக்கு பிறகு கல்லூரி மாணவர் உடல் தோண்டியெடுப்பு..!
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட கல்லூரி மாணவர் மர்ம மரணம் குறித்த வழக்கில் நீதிமன்ற உத்தரவுப்படி உடலை தோண்டி எடுத்து மறு உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது.
அனைகரைபட்டி கிராமத்தில் கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி கண்ணன் காதல் திருமணம் செய்தது தொடர்பான வழக்கில் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ரமேஷ் என்ற கல்லூரி மாணவர் அடுத்த நாள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
தொடர் போராட்டங்களுக்கு பிறகு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் நேரில் வந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டு உடல் அன்று மாலையே உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அணைக்கரைப்பட்டி மையானத்தில் புதைக்கப்பட்டது.
வழக்கு தொடர்பாக சாத்தூர் காவல் நிலையை சார்பு ஆய்வாளர்கள் ஜெயகண்ணன், பரமசிவம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். சந்தேக மரணம் தொடர்பான வழக்கில் ரமேஷின் உடலை மறு உடற்கூராய்வு செய்ய நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இதன்படி கிராமத்தில் உள்ள மயானத்தில் 21 நாட்களுக்குப் பின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு மறு உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. நெல்லை மருத்துவக் கல்லூரி பேராசிரியர் செல்வமுருகன், பிரசன்னா மற்றும் தடயவியல் துறை மூத்த மருத்துவர் மதிகரன் உள்ளடக்கிய மருத்துவ குழுவினர் முன்னிலையில் நடைபெற்றது. மறு உடற்கூறாய்வு முடிவுகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.






