சீமான் மீது 3 பிரிவில் வழக்கு..!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சுகள் கடந்த காலங்களில் பலமுறை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அதற்காக அவர் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஜனவரி மாதம் தமிழ் மொழி குறித்தும் பெண்கள் குறித்தும் பெரியார் பேசியதாக மேற்கோள் காட்டி சீமான் பேசியது கடும் சர்ச்சைகளை உண்டாக்கியது.
பெரியார் மீது நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் வைக்கவில்லை, அவதூறு பரப்பியுள்ளார் என அவருக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பெரியார் எங்கு அப்படி பேசினார் என ஆதாரம் கேட்கப்பட்ட நிலையில், இதுவரை அதற்கான ஆதாரத்தை சீமான் தரப்பு வழங்கவில்லை.
சீமானை எதிர்த்து திராவிட இயக்கங்கள், அமைப்புகள் சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு முழுவதும் சீமானுக்கு எதிராக 50க்கும் மேற்பட்ட இடங்களில் புகார் அளிக்கப்பட அதன் பேரில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்குகளை ஒரே இடத்தில் விசாரிக்க வேண்டும் என சீமான் வைத்த கோரிக்கையை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. இந்தநிலையில் பெரியார் குறித்து சர்ச்சைக் கருத்து தெரிவித்த சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த அரசு வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன் என்பவர் மணப்பாறை காவல் நிலையத்தில் சீமான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்திருந்தார்.






