அலுவலகங்கள், உணவகங்கள் மூட அதிரடி உத்தரவு..!
தலைநகர் டெல்லியில் தனியார் அலுவலகங்கள், உணவகங்களை மூட மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரொனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, மேற்கு வங்கம், கேரளா, தமிழகம் போன்ற மாநிலங்களில் அதிக அளவு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கிடையில் கொரொனா பரவலை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் தனியார் அலுவலகத்தை மூட மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
விதி விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்கள் மட்டும் செயல்படவும் மற்ற தனியார் நிறுவன ஊழியர்கள் வீடுகளில் இருந்தபடி வேலை செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து வகை உணவுகள் மற்றும் பார்களை மூட வேண்டுமெனவும், உணவகங்களில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.






