--- --:--:-- --

பட்ஜெட் கூட்டத் தொடரின் 2ஆவது அமர்வு இன்று தொடக்கம்..!

1

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு இன்று தொடங்குகிறது. வேலைவாய்ப்புகள் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி குறைப்பு ,போர் பாதித்த உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்டதில் தாமதம் உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

 

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. பிப்ரவரி 1ஆம் தேதி நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிலையில் மத்திய பட்ஜெட் மற்றும் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது.

 

இந்த நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு தொடங்குகிறது. முதல் நாளிலேயே ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்கிறார். பின்னர் மதிய உணவுக்குப் பிறகு அதன் மீதான விவாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதுதவிர சில முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே இந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வில் காங்கிரஸ் எப்படி செயல்பட வேண்டும் என்பதை முடிவு செய்வதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் அவரது இல்லத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

 

இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒருமித்த கருத்து கொண்ட எதிர்க்கட்சிகளுடன் இணைந்து மக்களுக்கு உகந்த முக்கிய பிரச்சினைகளை இந்த இரண்டாவது அமர்வில் எழுப்ப முடிவு செய்திருப்பதாக கூறினார்.

 

Right Menu Icon