தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்..!
தமிழகத்தில் கொரொனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. உணவகங்களில் அமர்ந்து சாப்பிடவும் தேநீர் கடைகளில் கூட்டம் கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மாறாக பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உணவுக் கூடங்களிலும் அமர்ந்து உண்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்களை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தனியாக செயல்படும் காய்கறி, மளிகை கடைகள் வழிமுறைகளைப் பின்பற்றி 50% வாடிக்கையாளர்களைத் தொடர்ந்து இயங்க அனுமதிக்கப் பட்டுள்ளது. பெரிய கடைகள், வணிக வளாகங்களுக்கு அனுமதி இல்லை. அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் அழகு நிலையங்கள் மற்றும் சலூன் கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உடற்பயிற்சிக் கூடங்கள், விளையாட்டு பயிற்சி சங்கங்கள், கேளிக்கை கூடங்கள், மதுபான பார்கள், கூட்ட அரங்குகள் உள்ளிட்டவை செயல்பட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அனைத்து திரையரங்குகள் செயல்படவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் தினமும் பூஜைகள் மட்டுமே நடத்துவதற்கு அனுமதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. பக்தர்கள் இன்றி குடமுழக்கு நடத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்க கூடாது என்றும் இறுதி ஊர்வலம் போன்ற சடங்குகளில் 25 நபருக்கு மேல் பங்கேற்கக் கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐடி நிறுவனங்களில் 50 சதவீத பணியாளர்கள் கண்டிப்பாக வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.






