சீட் தராததால் கடும் அதிருப்தி! அதிமுகவுக்கு பெண் எம்எல்ஏ முழுக்கு!
சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு தராத அதிருப்தியில், பண்ருட்டி அதிமுக எம்எல்ஏ சத்யா, அதிமுகவுக்கு முழுக்கு போட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 6ம் தேதி நடக்கிறது. தொகுதிப் பங்கீடு முடிந்து, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு பிரசாரம் சூடு பிடித்துள்ளது. வேட்பாளர்கள் பட்டியல் வெளியானதுமே அதிமுக – திமுகவில் சீட் கிடைக்காதவர்கள், ஆங்காங்கே அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். வேறு கட்சிக்கு தாவுவது, அல்லது எதிர்த்து களமிறங்குவது என்று அதிருப்தியாளர்கள் தங்கள் குமுறலை வெளிப்படுத்துகின்றனர்.
அதிமுகவில் சீட் கிடைக்காத விரக்தியில், பண்ருட்டி தொகுதி சிட்டிங் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம், கடந்த சில நாட்களாக கப்-சிப் என்றுள்ளார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சத்யா பன்னீர்செல்வம், கடந்த 5 ஆண்டுகளில் தொகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வந்தார்.
எனினும், கடலூர் தொகுதி எம்எல்ஏவும், தொழில்துறை அமைச்சருமான எம்.சி.சம்பத்துடன் கருத்து வேறுபாடு இருந்து வந்ததால், அவருக்கு எதிரணியான கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளரான அருண்மொழித்தேவனுடன் இணைந்து கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். இதனால் தான், மீண்டும் போட்டியிட வாய்ப்புக் கேட்டு தலைமையிடம் விண்ணப்பித்தும், சத்யாவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. மாறாக, குறிஞ்சிப்பாடி முன்னாள் எம்எல்ஏ சொரத்தூர் ராஜேந்திரனுக்கு பண்ருட்டி ஒதுக்கப்பட்டிருந்தது.
இதனால் எம்எல்ஏ சத்யா மட்டுமில்லாது அவரது ஆதரவாளர்களும் கடும் அதிருப்தியில் இருந்தனர். இந்நிலையில் குடும்பச்சூழல் காரணமாக அதிமுகவில் இருந்து மட்டுமல்ல அரசியலில் இருந்து எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் விலகிவிட்டதாக, அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். அதேபோல், முன்னாள் நகர மன்றத் தலைவரான அவரது கணவரும் அரசியலுக்கு முழுக்கு போட்டுள்ளார். இது, கடலூர் மாவட்ட அதிமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




