--- --:--:-- --

தமிழகத்தில் இனி அதிமுக ஆட்சிக்கு வரவே முடியாது: ஸ்டாலின் ஆவேசம்!

WhatsApp Image 2021-03-13 at 11.48.29 PM

திராவிட மண்ணான தமிழ்நாட்டில் இனி எந்தக் காலத்திலும் அ.தி.மு.க.வும் ஆட்சிக்கு வரமுடியாது; அதன் மூலமாக உள்ளே நுழைந்து விடலாம் என்ற பா.ஜ.க.வின் திட்டமும் பலிக்காது என்று, ‘இந்தியா டுடே’ கருத்தரங்கில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

 

இந்தியா டுடே இதழ் சார்பில் சென்னையில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் சிறப்புரையாற்றிய மு.க. ஸ்டாலின், அங்கு எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும் பதிலளித்தார். ஸ்டாலின் பேசியதாவது:

 

கடந்த டிசம்பர் மாதம் 7-ஆம் தேதி, இந்தியா டுடே பத்திரிகையில், தமிழகம் தலைகுனிந்து நிற்கிறது – தமிழகத்திற்கு தலைகுனிவு ஏற்பட்டிருக்கிறது – என்ற நிலையில் ஒரு பட்டியலை வெளியிட்டிருந்தார்கள். அந்தப் பட்டியலில் பல்வேறு மாநிலங்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால், அந்தப் பட்டியலில் தமிழ்நாடு இடம்பெறவில்லை. அது எங்களுக்கெல்லாம் தலைகுனிவாகவே கருதுகிறோம். அப்படிப்பட்ட ஓர் அரசை, எடப்பாடி பழனிசாமி நடத்திக் கொண்டிருக்கிறார்.

 

இந்த நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் பழனிசாமி பங்கேற்று பேசும்போது, ‘என்னுடன் விவாத நிகழ்ச்சியில் ஸ்டாலின் விவாதிக்கத் தயாரா?’ என்ற ஒரு கேள்வி கேட்டிருக்கிறார். நான் முன்னரே அதற்கு பதில் சொல்லி இருக்கிறேன். ‘என்னை விவாதத்திற்கு வருமாறு நீங்கள் அழைத்திருக்கிறீர்கள். நீங்கள் வாங்கி வைத்திருக்கும் தடையைத் திரும்பப் பெற்ற பிறகு நீங்கள் குறிப்பிடும் இடத்திற்கு நான் வரத் தயார் என்று அப்போதே சொல்லி இருக்கிறேன். அதற்கு இதுவரை அவர் பதில் சொல்லவில்லை.

 

நான் இப்போது கேட்கும் கேள்வி, என்னை அழைத்து விவாதிக்கத் தயாரா என்று கேட்பதை விட, தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவாக இருக்கக் கூடிய நிலையில், இந்தியா டுடே வெளியிட்டிருக்கும் அந்தப் பட்டியலில் ஏன் தமிழ்நாடு இடம்பெறவில்லை என்று இந்தியா டுடேவிடம் பழனிசாமி கேட்டிருந்தால் நான் பாராட்டி இருப்பேன். அதற்கு அவருக்குத் தகுதி இல்லாமல் போய்விட்டது என்பதுதான் உண்மை.

 

எடப்பாடி தொகுதியில் கூட முதலமைச்சர் பழனிசாமி நிச்சயமாக வெற்றி பெற முடியாத நிலையில்தான் இருக்கிறார். எல்லாம் முடிந்த பிறகு என்ன நிலைக்கு அவர் ஆளாகப்போகிறார் என்பது பற்றி நான் அதிகம் சொல்ல வேண்டியதில்லை. இன்றைக்கு தமிழ்நாட்டின் அரசியலைப் பொறுத்தவரையில் – இந்த ஆட்சியை பொறுத்தவரையில் கரப்ஷன் – கமிஷன் – கலெக்ஷன் என்ற நிலையில்தான் போய்க்கொண்டிருக்கிறது.

 

மத்திய அரசின் தயவுவோடு அதிமுக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டை தி.மு.க. தான் இனி ஆளப் போகிறது. அ.தி.மு.க. ஆட்சியின் மூலமாக எப்படியாவது உள்ளே நுழைந்து விடலாம் என்று பா.ஜ.க திட்டம் போட்டிருக்கிறது. அ.தி.முக ஆட்சியும் வர முடியாது. பா.ஜ.கவும் வர முடியாது. காரணம், இது திராவிட மண். தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – தலைவர் கலைஞர் வாழ்ந்த மண், இந்த மண். எனவே எந்த காலத்திலும் முடியாது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon