பகிரங்க மிரட்டல் விடுத்த அரசு மருத்துவர் சங்க தலைவரின் ஆடியோ..!
அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களை தேவைக்கு ஏற்ப தற்காலிக பணியிட மாறுதல் செய்து வழக்கமான நடைமுறை. அந்தவகையில் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் புதிதாக பணிக்கு சேர்ந்து கடந்த நான்கு மாதங்களாக பொது மருத்துவ பிரிவில் மருத்துவராக பணியாற்றி வந்த டாக்டர் கிருத்திகா என்பவரை அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு தாலுகா பொது மருத்துவமனையில் பணிபுரிய ஆறு நாட்கள் மட்டும் தற்காலிக பணியிடை மாறுதல் வழங்கப்பட்டது.
இதற்கான உத்தரவை பெரம்பலூர் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் டாக்டர் திருமால் பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவை மதிக்காமல் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பணிக்கு செல்ல மறுத்த டாக்டர் கிருத்திகா மருத்துவ விடுப்பு எடுத்து சென்றுவிட்டார்.
பின்னர் தான் உறுப்பினராக உள்ள தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்க பெரம்பலூர் மாவட்ட தலைவர் அர்ஜுனன் என்பவரிடம் கிருத்திகா சிபாரிசுக்கு சென்றுள்ளார். அர்ஜுனனின் சிபாரிசை ஏற்க மறுத்த திருமால் தனது உத்தரவை மதித்து ஒரு நாளாவது ஜெயங்கொண்டத்தில் பணிபுரிய சொல்லுங்கள்.
மீண்டும் பழைய இடத்திற்கு பணியிட மாறுதல் உத்தரவில் கையெழுத்திடுகிறேன் என கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்க தலைவர் டாக்டர் செந்தில் என்பவர் பெரம்பலூர் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் திருமாலை செல்போனில் தொடர்பு கொண்டு கிருத்திகாவின் தற்காலிக பணியிட மாறுதல் தொடர்பாக அதிகார தோனியில் பேசி மிரட்டியதாக கூறப்படுகிறது.
செந்திலின் இந்த மிரட்டல் தொடர்பாக ஆடியோ ஆதாரத்துடன் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை மருத்துவ பணிகள் இயக்குனர் எழுத்துப்பூர்வமாக புகார் ஒன்றை அனுப்பியுள்ளார்.
திருமால் மருத்துவர் பணியிடமாறுதலில் தொடங்கி பல்வேறு வகைகளில் செந்தில் முறைகேட்டில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த மிரட்டல் சம்பவத்தின் ஆடியோ அரசு மருத்துவர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.






