புதிய வேளாண் மசோதாக்களுக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் தமிழகம் முழுவதும் போராட்டம்.. காஞ்சியில் ஸ்டாலின் பங்கேற்பு!!
மத்திய அரசின் புதிய வேளாண் மசோதாக்களுக்கு எதிராக தமிழகம் முழுவதும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் போராட்டம நடைபெற்றது. காஞ்சிபுரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் 3 புதிய வேளாண் திருத்த மசோதாக்களை மத்திய அரசு கொண்டு வந்தது. வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்கள் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று ஒப்புதலும் வழங்கினார்.
இந்த மசோதாக்கள் விவசாயிகளை பெரிதும் பாதிக்கும் என எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளும், விவசாயிகளும் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. மத்திய அரசில் பங்கு வகித்த
சிரோன்மணி அகாலி தளமும் எதிர்ப்பு தெரிவித்து கூட்டணியிலிருந்து வெளியேறியது. இந்த வேளாண் மசோதாவிற்கு தமிழகத்திலும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், விவசாய சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த மசோதாவிற்கு எதிராக செப்.28-ல் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த கடந்த வாரம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இன்று போராட்டம் நடைபெற்றது.இதில் திமுக, காங்கிரஸ், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்றனர்.
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.






