--- --:--:-- --

கரகாட்டம், சென்டை மேளம், ஆட்டம் பாட்டத்துடன் களைகட்டிய அதிமுக பொதுக்குழுக் கூட்டம் ; உள்ளாட்சித் தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை!!

IMG-20191124-WA0033

2 ஆண்டுகளுக்குப் பிறகு, அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூடுவதால், கூட்டம் நடைபெறும் வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசஜலபதி பேலஸ் மண்டபம் முன்பு கரகாட்டம், கேரள சென்டை மேளம், ஆட்டம், பாட்டம் என தடபுடல் ஏற்பாடுகளுடன் களைகட்டியுள்ளது.

 

ஜெயலலிதா மறைவுக்குப் பின் 2016 டிசம்பரில் அதிமுக பொதுக்குழு கூடியது. இதில் அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அதன் பின் சசிகலா சிறை செல்ல நேர்ந்ததும், அவரால் முதல்வராக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமியின் கை கட்சி, ஆட்சி அதிகாரத்திலும் ஓங்கியது. தனி அணிகண்ட ஓ.பன்னீர் செல்வத்தையும் இணைத்துக் கொண்டு, சசிகலா குடும்பத்தையே ஓரம் கட்டினார்.

இதையடுத்து கடந்த 2017 செப்டம்பரில் அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டு, பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சசிகலா நீக்கப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கட்சியை வழி நடத்த ஒருங்கிணைப்பாளர், இணை, துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளும் அந்த பொதுக்குழுவில் உருவாக்கப்பட்டன.

இந்நிலையில் தான், 2 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு அதிமுக செயற்குழு, பொதுக்குழு இன்று கூடுகிறது. பொதுக்குழு கூட்டத்தை முன்னிட்டு, கூட்டம் நடைபெறும் வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டப வளாக மும் , அதனை சுற்றியுள்ள பகுதிகளும் அதிமுக கட்சிக் கொடிகளாலும், வாழை மர தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

 

மண்டப முகப்பில், அதிமுக தலைமைக் கழகம் போன்றே வடிவமைக்கப் பட்டுள்ளது.மேலும் பொதுக்குழுவில் பங்கேற்க வரும் கட்சித் தலைவர்களையும், உறுப்பினர்களையும் வரவேற்க, மண்டபம் முன் கரகாட்டம், சென்டை மேளம், ஆட்டம் பாட்டம் என பொதுக்குழு நடைபெறும் இடம் களை கட்டி காணப்படுகிறது.

 

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள, பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக பொதுக்குழு கூடுவதால், இந்தக் கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பொதுக் குழுவில் அதிமுக சட்ட திட்டங்களில் மாற்றம் கொண்டு வருவது, உள்ளாட்சித் தேர்தல் வெற்றிக்கான வியூகம் வகுப்பது குறித்து முக்கிய விவாதமும், தீர்மானங்களும் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon