--- --:--:-- --

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற மக்களுக்கு இன்று முதல் அனுமதி

1

திருப்பரங்குன்றம் மலையில் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே இன்று முதல் தீபம் ஏற்ற பொதுமக்களுக்கு அனுமதி வழங்கி கோவில் நிர்வாக பொறுப்பாளர்களான ஓய்வு பெற்ற நீதிபதிகள் அறிவித்துள்ளனர். முருகப்பெருமானின் அறுபடை வீடிகளில் முதல் வீடாக மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள சுப்பிரமணிய சாமி கோயில் திகழ்கிறது. இந்த கோயில் மலையில் உள்ள தூணில் கடந்த 24 ஆம் தேதி திருக்கார்த்திகை தினத்தன்று தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. ஆனால், மலையில் வழக்கமாக ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோயிலுக்கு அருகில் மட்டும் தீபம் ஏற்பட்டது.

 

 

மலைத்தூணில் தீபம் ஏற்றப்படாதது குறித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் நேற்று தீபம் ஏற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன், திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகத்தை கவனிக்கவும், மலை உச்சியில் தீபம் ஏற்றுவதை உறுதி செய்யவும் ஓய்வுபெற்ற நீதியரசர்கள் வைத்தியநாதன் மற்றும் பார்த்திபன் ஆகியோர் அடங்கிய குழுவை நியமித்தது.

 

 

இதையடுத்து, திருபரங்குன்றத்தில் காவல்துறை பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டு மலை முழுவதும் சிஆர்பிஎஃப் படையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நீதியரசர்கள் மதுரை வந்தடைத்ததும், மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றுவதற்கான பணிகள் தீவிரமடைந்தன. மாலை 4.30 மணியளவில் ஓய்வுபெற்ற நீதியரசர்கள் உள்ளிட்ட வழிகாட்டுதல் குழுவினர் தூண் இருக்கும் பகுதிக்கு வந்தனர். தொடர்ந்து, மாலை 5 மணியளவில் இரண்டு நீதியரசர்களும், ஸ்தானிக பட்டர்களுடன் சேர்ந்து தீபம் ஏற்றினர்.

 

 

மலை அடிவாரத்தில் குழுமியிருந்த பக்தர்கள், ‘வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா’ என முழக்கமிட்டு வழிபட்டனர். தொடர்ந்து அரோகரா… முழக்கம் அதிர… பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் விநியோகித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். திருப்பரங்குன்றம் மலை மீது பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படுவது குறித்து ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் என கோவில் நிர்வாக பொறுப்பாளர்களான நீதியரசர்கள் தெரிவித்தனர்.

 

 

இந்நிலையில் இன்று முதல் திருபரங்குன்றம் மலையில் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே தீபம் ஏற்ற பொதுமக்களுக்கு அனுமதி வழங்கி கோவில் நிர்வாக பொறுப்பாளர்களான ஓய்வு பெற்ற நீதிபதிகள் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், பக்தர்களின் வழிபாடு மற்றும் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு, நிர்வாகப் பொறுப்பாளர்களின் உத்தரவின்படி, உச்சிப்பிள்ளையார் கோவில் அருகில் மட்டும் 29.11.2026 முதல் 15.12.2026 வரை காலை 10.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை பொதுமக்கள் தீபமேற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

 

எனவே, பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் திருக்கோயில் நிர்வாகப் பொறுப்பாளர்கள் மற்றும் மத்திய பாதுகாப்புப் படையினர் வழங்கும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, அமைதியான முறையில் தீபமேற்றி சட்டம்-ஒழுங்கைப் பேணுவதற்கு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon