பொதுவெளியில் விவாதிக்க வேண்டாம் – ஆர்.பி.உதயகுமார்
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், கட்சியின் ஒற்றுமையைப் பொதுவெளியில் விவாதிக்காமல், அறைக்குள் அமர்ந்து பேசி நல்ல தீர்வு காண வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியிருப்பதாவது:-கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றதால், எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் அம்மாவின் ஆட்சியை அமைக்கும் வாய்ப்பு இல்லாமல் போனது. இது அனைவருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியது.
தேர்தலுக்குப் பிறகு பல்வேறு கட்சிகள் கூட்டணி அமைக்கின்றன, ஆட்சி அமைக்கின்றன எனப் பல வதந்திகளும், யூகங்களும் பரவின. ஆனால், அவை எதுவும் நடைபெறவில்லை.
தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை இல்லாத நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை நேரில் சந்தித்த விஜய், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மட்டும் சந்திக்கவில்லை. அதிமுகவின் மூத்த இரண்டாம் கட்டத் தலைவர்களையும் சந்தித்து அமைச்சர் பதவி வழங்குவதாக ஆசை காட்டினார்.
அதிமுகவில் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற 27 சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டமன்றக் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கொறடாவின் உத்தரவையும் மீறி தவெக ஆட்சிக்கு ஆதரவாக வாக்களித்தனர். பின்னர் தங்களது நிலைப்பாட்டிற்கு வருத்தம் தெரிவித்து கடிதம் அளிக்க முன்வந்தபோது, ‘குற்றம் பார்க்கின் சுற்றமில்லை’ என்ற பேரறிஞர் அண்ணாவின் கூற்றுக்கு ஏற்ப, அவர்களது கடிதத்தை ஏற்றுக்கொண்டு தகுதி நீக்கத்திலிருந்து காப்பாற்றியவர் எடப்பாடி பழனிசாமிதான்.
தேர்தலில் அதிமுக ஆட்சி அமைக்க முடியாமல் போனதற்கு அனைவருக்கும் கூட்டுப் பொறுப்பு இருக்கிறதே தவிர, எடப்பாடி பழனிசாமி மீது மட்டும் பழி சுமத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது. எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன் உள்ளிட்ட மூத்த தலைவர்களின் ஆலோசனைகளைக் கேட்டுத்தான் எடப்பாடி பழனிசாமி முடிவுகளை எடுத்து வந்தார்.எடப்பாடி பழனிசாமிக்கும், எஸ்.பி.வேலுமணிக்கும் இடையே ராமன், லட்சுமணனைப் போன்ற ஒற்றுமை இருந்தது. இருவரும் களத்தில் இறங்கிச் செயல்பட்டால் வெற்றி பெறும் வரலாறு அதிமுகவுக்கு உண்டு. இந்த ஒற்றுமையில் இடைவெளி ஏற்பட்டுவிடாதா எனச் சிலர் காத்திருப்பதாகத் தொண்டர்கள் கவலைப்படுகின்றனர்.
எடப்பாடி பழனிசாமி அறிவித்த துணைப் பொதுச்செயலாளர் பதவியை எஸ்.பி.வேலுமணி ஏற்றுக்கொண்டு செயல்படாமல் அமைதியாக இருந்ததால்தான், கோவையில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அதிமுகவில் உள்ள 2 கோடி தொண்டர்களில் ஒருவர்தான் வேலுமணி என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். அவர் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்று கட்சிப் பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வத்தில்தான் அந்தக் கருத்தைத் தெரிவித்திருக்கிறார் என்பதே சாமானியத் தொண்டர்களின் கருத்து.
எடப்பாடி பழனிசாமிக்கும், எஸ்.பி.வேலுமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அதிமுகவில் பின்னடைவு ஏற்பட்டுவிடக் கூடாது. கட்சியை விட்டு வெளியேறியவர்களுக்காக நமக்குள் கருத்து மோதல்கள் ஏற்பட வேண்டிய அவசியமில்லை. அதிமுகவை விட்டு வெளியேறிய சிலர் தனிக்கட்சி தொடங்கியும், மற்ற கட்சிகளில் இணைந்தும் செயல்பட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி, அதிமுகவை எதிர்த்து இரட்டை இலை சின்னத்திலும் போட்டியிட்டுள்ளனர். எனவே, அவர்கள் தற்போது முன்வைக்கும் ஆலோசனைகள் வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், காலம் கடந்த யோசனையாகவே உள்ளது.
அதிமுக என்பது ஒரு கட்சி மட்டுமல்ல; தமிழ்நாட்டு மக்களுக்குக் கிடைத்த பொக்கிஷம். புரட்சித் தலைவர் எம்ஜிஆர் தொடங்கிய கட்சியை, புரட்சித் தலைவி அம்மா வளர்த்தார். தற்போது எடப்பாடி பழனிசாமி கட்சியைக் கட்டிக்காத்து வருகிறார். கட்சியின் ஒற்றுமைக்காகத் தஞ்சாவூரில் மகேந்திரன் என்ற விசுவாசத் தொண்டர் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் நெஞ்சைப் பதற வைக்கிறது. இனிமேல் இதுபோன்ற சூழல் உருவாகிவிடக் கூடாது. கட்சியின் ஒற்றுமையைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமல்லாமல், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன் உள்ளிட்ட மூத்த தலைவர்களுக்கும், 2 கோடி தொண்டர்களுக்கும் உள்ளது.
எடப்பாடி பழனிசாமி நான்கரை ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தபோது 33 அமைச்சர்களையும் ஒருங்கிணைத்துச் செயல்பட்டார். உள்ளாட்சித் துறையில் 126 விருதுகள் பெறுவதற்கும், கிராமங்கள் தோறும் சாலைகள் அமைப்பதற்கும் அவர் வகுத்துக் கொடுத்த பாதையே காரணம்.
எனவே, கருத்து வேறுபாடுகள் ஆயிரம் இருந்தாலும், அவற்றைப் பொதுவெளியில் விவாதிப்பது ஆரோக்கியமானதாக இருக்காது. அனைவரும் அறைக்குள் அமர்ந்து அமைதியாகப் பேசி நல்ல தீர்வு காண வேண்டும். பொதுவெளியில் கருத்து மோதல்களை விவாதிப்பதால் கட்சிக்கு மேலும் பின்னடைவு ஏற்படுமோ என்ற அச்சம் உள்ளது.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். எம்ஜிஆர், அம்மாவின் திருநாமத்தில் மக்கள் சேவையைத் தொடர்ந்து, தேர்தல் களத்தில் வெற்றி வாகை சூடுவோம்.இவ்வாறு ஆர்.பி.உதயகுமார் தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





