--- --:--:-- --

எஸ்.பி வேலுமணி வழக்கில் திடீர் திருப்பம்!

13

கடந்த அ.தி.மு.க ஆட்சி காலத்தில், சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் சாலைப் பணிகளுக்கான டெண்டர்கள் ஒதுக்கியதில் ரூ.98.25 கோடி அளவுக்கு முறைகேடு நடந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. இந்த முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியுடன், அப்போதைய பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையர் கே.எஸ். கந்தசாமி மற்றும் கோவை மாநகராட்சி முன்னாள் ஆணையர் கே. விஜய கார்த்திகேயன் ஆகிய இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மீதும் லஞ்ச ஒழிப்புத் துறை குற்றப்பத்திரிகை தயார் செய்தது.

 

 

அதிகாரிகள் மீது வழக்குத் தொடர உரிய அனுமதி பெறுவதில் பல ஆண்டுகளாகத் தாமதம் ஏற்படுவதாகக் கூறி, அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளான கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகேயன் ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி வழங்குவதற்கான நடைமுறைகளை 2 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என மத்திய அரசிற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

 

 

இந்நிலையில், இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சி துறை கிளை செயலாளர் சார்பில் தாக்கல் செய்துள்ள மனுவில் குற்றம்சாட்டப்பட்ட 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி வழங்கப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

அதற்கான அனுமதியை பொதுத்துறைக்கு ஈ-மெயில் மூலமாக மத்திய அரசு நவம்பர் 11 ஆம் தேதி அனுப்பி வைத்துள்ளதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதையடுத்து நீதிபதி, குற்ற வழக்குகளில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதி பெறுவதற்கு எவ்வளவு முயற்சி தேவைப்படுகிறது என்பதற்கு இந்த வழக்கு ஒரு சிறந்த உதாரணம். ஏழை மக்களுக்கு எதிராக வேகமாக நடவடிக்கைகள் எடுக்கும் அரசு இயந்திரம், செல்வாக்கு மிக்கவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுப்பதே இல்லை. இந்த வழக்கில் தீர்வை எட்டுவதற்கு இந்த நீதிமன்றம் மிகவும் கடுமையாகப் போராட வேண்டியிருந்தது எனவும் வேதனை தெரிவித்தார்.

 

 

மேலும், இரு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கிடைத்த நிலையில், உடனடியாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்க வேண்டும். சம்மந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கைகளை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை எடுத்த நடவடிக்கை குறித்து டிசம்பர் 4 -ஆம் தேதி பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி ஒத்தி வைத்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon