சென்னையில் 6,157 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்ட அரசு அனுமதி
தமிழ்நாட்டில் நகர்ப்புற ஏழை மற்றும் எளிய மக்களின் சொந்த வீடு என்ற கனவை நனவாக்கும் வகையிலும், குடிசை இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கும் நோக்கிலும், சென்னையில் 9 திட்டப்பகுதிகளில் ரூ.1,401.75 கோடி மதிப்பீட்டில் 6,157 அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டுவதற்கு முதலமைச்சர் விஜய் ஆணையிட்டுள்ளார்.
பாதுகாப்பான மற்றும் அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய தரமான குடியிருப்புகளை உருவாக்குவதில் முதலமைச்சர் தலைமையிலான அரசு தொடர்ந்து பல்வேறு சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பிரிவினரின் (EWS) வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ஒரு முக்கிய முயற்சியாக, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் (TNUHDB) பழுதடைந்த குடியிருப்புகளை மறுகட்டுமானம் செய்வதற்கும், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினரின் நலனுக்காகப் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள புதிய வீட்டுவசதித் திட்டத்திற்கும் முதலமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார். தேவையான உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளுடன் கூடிய நவீன வீட்டுவசதி அலகுகளை உள்ளடக்கியதாக இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், சென்னையின் 9 முக்கியப் பகுதிகளில் மொத்தம் 6,157 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன. குறிப்பாக, ஃபோர்ஷோர் எஸ்டேட் திட்டப்பகுதியில் 1,484 குடியிருப்புகளும், பழைய பிளாக் வியாசர்பாடி திட்டப்பகுதியில் 1,158 குடியிருப்புகளும், பச்சைக்கல் வீராசாமி தெரு திட்டப்பகுதியில் 912 குடியிருப்புகளும், உதயசூரியன் நகர் திட்டப்பகுதியில் 850 குடியிருப்புகளும் கட்டப்பட உள்ளன. மேலும், மேற்குக் கல்லறை சாலைத் திட்டப்பகுதியில் 792 குடியிருப்புகள், முல்லை நகர் திட்டப்பகுதியில் 462 குடியிருப்புகள், கக்கன் காலனி திட்டப்பகுதியில் 324 குடியிருப்புகள், ருக்மணி நகர் திட்டப்பகுதியில் 111 குடியிருப்புகள் மற்றும் அனாதைக்குப்பம் திட்டப்பகுதியில் 64 குடியிருப்புகள் என மொத்தம் 6,157 அடுக்குமாடிக் குடியிருப்புகள் ரூ.1,401.75 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ளதாக செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





