--- --:--:-- --

இனி 15 நாட்களில் என்.ஓ.சி அனுமதி..!

8

தமிழ்நாட்டில் உள்ள நீர்நிலைகளைப் பாதுகாக்கவும், தூர்வாரி கரைகளைப் பலப்படுத்தவும் விரும்புபவர்களுக்கு ஒரு நற்செய்தி. நீர்நிலைப் புனரமைப்புப் பணிகளில் ஈடுபடும் அரசுசாரா அமைப்புகள் (NGOs), தன்னார்வலர்கள் மற்றும் பெருநிறுவன சமூகப் பொறுப்பு (CSR) நிதியுதவி வழங்கும் நிறுவனங்கள், எளிமையான முறையில் இணையவழியில் தடையின்மைச் சான்றிதழ் (NOC) பெறுவதற்காகத் தமிழ்நாட்டின் நீர்வளத் துறை சார்பில் “ஏரி” (https://eri.tn.gov.in) என்ற சிறப்பு இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

 

 

முன்பு பல்வேறு அரசுத் துறைகளை அணுகி தடையின்மைச் சான்றிதழ் பெறுவதில் நிலவிவந்த காலதாமதம் மற்றும் சிரமங்களைத் தவிர்க்கவே இந்த ஒருமுகப்படுத்தப்பட்ட தளம் உருவாக்கப்பட்டுள்ளது. நீர்நிலைகளைப் புனரமைக்க விரும்பும் அமைப்புகளும் தன்னார்வலர்களும் https://eri.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று நேரடியாக விண்ணப்பிக்கலாம்.

 

 

நீர்நிலைகளைத் தூர்வாருதல், பலவீனமான கரைகளைப் பலப்படுத்துதல் மற்றும் அனுமதிக்கப்பட்ட சிறிய அளவிலான மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதற்காக இந்த இணையவழியில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும்.ஐந்து முக்கிய அரசுத் துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நீர்நிலைகளின் அனைத்து விவரங்களும் இந்த ஒரே தளத்தில் எளிதாகக் கிடைக்கும் வகையில் தொகுக்கப்பட்டுள்ளன.

 

 

நேரடி விண்ணப்ப முறைகளுக்குப் பதிலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த டிஜிட்டல் அமைப்பின் மூலம் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படுகிறது. தகுதியான விண்ணப்பங்களைப் பரிசீலித்து, விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் தடையின்மைச் சான்றிதழ் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

விண்ணப்பங்களைப் பரிசீலித்தல், ஒப்புதல் அளிக்கும் முறையைக் கண்காணித்தல் மற்றும் பல்வேறு அரசுத் துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக மாநில நீர்வள மேலாண்மை முகமையின் தலைமைப் பொறியாளர் மற்றும் இயக்குநர் அதிகாரப்பூர்வ அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 

இத்திட்டத்தின் தொடக்கமாக சிறுதுளி, இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளை, எக்ஸ்னோரா சர்வதேச அறக்கட்டளை, மெகா அறக்கட்டளை மற்றும் தானம் அறக்கட்டளை ஆகிய முன்னணி அரசுசாரா அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு முதலமைச்சர் தடையின்மைச் சான்றிதழ்களை வழங்கி பணிகளைத் தொடங்கி வைத்துள்ளார். பொதுமக்களும், தொண்டு நிறுவனங்களும் இந்த டிஜிட்டல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, தமிழகத்தின் நீர்ச்சேமிப்புத் திறனையும் நீர்நிலைகளின் செயல்பாடுகளையும் மேம்படுத்தப் பெருமளவில் முன்வரலாம்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon