ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்த பாஸ்டர் ஜான் ஜெபராஜின் தாயார்
கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், பாஸ்டர் ஜான் ஜெபராஜின் தாயார் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், கடந்த 2025-ஆம் ஆண்டு தனது மகன் பாஸ்டர் ஜான் ஜெபராஜை, சட்ட விதிமுறைகளுக்கு புறம்பாகக் கைது செய்ததாக அப்போதைய கோயம்புத்தூர் மத்திய அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ரேணுகாதேவி மீது குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் ரேணுகாதேவி மீது உரிய விசாரணை நடத்தி, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி இன்று காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தனது புகார் மற்றும் கோரிக்கைகள் குறித்து விளக்கமளித்தார். இந்த புகார் தொடர்பாக காவல்துறை விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
கோவையில் குழந்தைகள் சட்டவிரோதமாக அழைத்து வரப்பட்டு, உரிய சட்ட நடைமுறைகளை பின்பற்றாமல் வளர்க்கப்பட்டதாகக் கூறி, அலெக்ஸாண்டர் மற்றும் அவரது மனைவி எஸ்தர் ராணி ஆகியோர் மீது விசாரணை நடத்தக் கோரி, பாரிஷா டேவிட் என்பவர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
66 வயதான பாரிஷா டேவிட் அளித்துள்ள புகார் மனுவில், கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் 2007-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், அலெக்ஸாண்டர் மற்றும் அவரது மனைவி எஸ்தர் ராணி ஆகியோர் முறையான சட்ட நடைமுறைகளை பின்பற்றாமல், ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளிட்ட பல குழந்தைகளை அழைத்து வந்து வளர்த்து வந்ததாக சந்தேகம் எழுப்பியுள்ளார்.
மேலும், அந்த குழந்தைகளின் உண்மையான பிறந்த தேதி, பெற்றோர் விவரங்கள் உள்ளிட்ட தகவல்களை மறைத்து பள்ளிகளில் சேர்த்ததாகவும், குழந்தைகள் எங்கிருந்து அழைத்து வரப்பட்டனர், அவர்களை வளர்ப்பதற்கான சட்டப்பூர்வ அனுமதி பெறப்பட்டதா என்பது குறித்தும் விரிவான விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரியுள்ளார்.
குறிப்பாக, தனது மகன் பாஸ்டர் ஜான் ஜெபராஜுக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினையைத் தொடர்ந்து, குழந்தைகள் தொடர்பான விவகாரத்தை பயன்படுத்தி பணம் பறிக்க சதி செய்யப்பட்டதாகவும் புகார் மனுவில் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மேலும், சிறார் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2015 மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் குறிப்பிட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதா என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
கடந்த காலங்களில் எத்தனை குழந்தைகள் இவ்வாறு அழைத்து வரப்பட்டனர்? அவர்களின் உண்மையான பெற்றோர் யார்? சட்டப்பூர்வ தத்தெடுப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டனவா? மேலும், இதுதொடர்பாக ஏற்கனவே ஏதேனும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனவா என்பது குறித்தும் காவல்துறை விரிவான விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த புகார் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி உண்மைகளை கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, கோவை மாநகர காவல் ஆணையரிடம் பாரிஷா டேவிட் மனு அளித்துள்ளார். இந்த புகாரில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் விசாரணையில் உறுதி செய்யப்பட வேண்டியவை என்பது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





