தி.நகரில் 1,000 ஏ.ஐ கேமராக்கள் : ஆனந்த்
சென்னை தியாகராயநகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு இ-சேவை மையம் துவக்க விழா மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவும் பணியை அமைச்சர் ஆனந்த் தொடங்கி வைத்துள்ளார். தியாகராயநகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 8 காவல் நிலையங்களில் சி.சி.டி.வி கேமராக்கள் அமைக்கும் பணியானது தற்போது முதல் கட்டமாக தொடங்கப்பட்டு உள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பை பலப்படுத்தவும், குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும் மற்றும் போக்குவரத்து நெரிசலைக் கண்காணிக்கவும் சென்னை தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதியில் 1,000-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.முதற்கட்டமாக 146 இடங்களில் 350 சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
ஏ.ஐ தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த கேமராக்களில் சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகளைத் தானாகவே கண்டறியும் வசதி, குற்றவாளிகள் மற்றும் சந்தேகத்திற்குரிய நபர்களின் முகங்களைத் துல்லியமாகக் கண்டறியும் தொழில்நுட்பம், அதிவேகமாகச் செல்லும் மற்றும் சந்தேகத்திற்குரிய வாகனங்களின் எண்களைக் கண்காணிக்கும் வசதி, பண்டிகைக் காலங்களில் தியாகராயநகரில் கூடும் அதிகப்படியான மக்கள் கூட்டத்தை கண்காணிக்க உதவும் வசதிகள் உள்ளன.
இந்த திட்டத்தின் கீழ், தொகுதி முழுவதும் பொருத்தப்படும் அனைத்து கேமராக்களின் நேரலை காட்சிகளையும் ஒரே இடத்தில் ஒருங்கிணைத்துப் பதிவு செய்யவும், கண்காணிக்கவும் மையப்படுத்தப்பட்ட பதிவு மற்றும் கண்காணிப்பு அமைப்பு உருவாக்கப்பட உள்ளது. இந்த அதிநவீன கண்காணிப்பு அமைப்பின் மூலம், சந்தேகத்திற்குரிய நபர்களின் நடமாட்டத்தை உடனடியாகக் கண்டறிந்து குற்றங்களைத் தடுக்க முடிவதுடன், அவசர காலங்களில் காவல் துறையினர் விரைவாக செயல்பட இது பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு தியாகராய நகர் சட்டமன்ற தொகுதியிகளில் மட்டும் முதல் கட்டமாக ரூ.3 கோடி செலவில் இந்த கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





